சென்னையின் மிக முக்கியச் சாலைகளில் ஒன்றான சென்னை புறவழிச்சாலையில் வாகனக் கணக்கெடுப்பை தேசிய நெடுஞ்சாலைத்துறை நடத்தியுள்ளது. இந்த முக்கியச் சாலையைப் பயன்படுத்தும் பல ஆயிரம் வாகனங்கள், வரி செலுத்தாமல் தப்பிச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை வழியாக வெளி மாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்கள் நகரினுள் வராமல், புறநகர்ப் பகுதிகளை ஒட்டியவாறு செல்லும் வகையில் சென்னை புறவழிச் சாலையை தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைத்தது. தென் மாவட்டங்களிலிருந்து ஜிஎஸ்டி சாலையில் வரும் வாகனங்கள் தாம்பரம் வழியாக சென்னைக்குள் நுழையாமல், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக இரும்புலியூரில் தொடங்கி புழல் வரையிலான (ஜிஎன்டி சாலை வரை) 32 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த 6 வழிப்பாதை (12 கி.மீ. நீளம் 4 வழிப்பாதை) அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், தென் மாவட்டங்களி லிருந்து வரும் வாகனங்கள் சென்னைக்குள் நுழையாமலேயே இச்சாலை வழியாக கர்நாடக, ஆந்திர மாநிலங்களுக்குச் செல்லமுடியும் என்பதால், நாளடைவில் வாகனப் போக்குவரத்து பன்மடங்கு அதிகரித்து விட்டது. இப்புறவழிச் சாலையில், பெங் களூரு செல்வதற்கு, மதுரவாயல் அருகே சாலை பிரிவதால், மதுர வாயல் புறவழிச்சாலை என்றே சென்னைவாசிகள் இதனை குறிப்பிடுகின்றனர்.
இச்சாலையை கட்டி-இயக்கி-ஒப்படைக்கும் ஒப்பந்த அடிப் படையில், தனியாரிடம் தேசிய நெடுஞ்சாலை ஒப்படைத்துள்ளது. மதுரவாயலில் இருந்து அம்பத்தூர் போன்ற இடங்களை நோக்கிச் செல்வோர், இந்த புறவழிச் சாலையின் சர்வீஸ் சாலை வழியாக போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் எளிதாகச் சென்றுவிடலாம். இதனால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த 4 கி.மீ. நீளச் சாலையை தினசரி கடந்து செல்கின்றன. ஆனால், சுங்கச்சாவடி அமைந்துள்ள வானகரத்துக்கு அப்பால் இந்த சர்வீஸ் சாலை தொடங்குகிறது.
அதனால், தங்களுக்கு தினசரி வரவேண்டிய பல லட்சம் ரூபாய் சுங்கவரி கிடைக்காமல் போவதாக, தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம், இச்சாலையை நிர்வகித்து வரும் தனியார் நிறுவனம் முறை யிட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு எங்கெங்கெல்லாம் இதுபோல் வரியிழப்பு ஏற்படு கிறதோ அங்கெல்லாம் வாகன ஓட்டிகளிட மிருந்து சுங்கம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அதுபோன்ற வரியிழப்பு ஏற்படும் இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்தும், ஊழியர்களை நியமித்தும் 24 மணி நேர கணக்கெடுப்பை அந்த தனியார் நிறுவனம் மேற்கொண்டது.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறியதாவது:
கடந்த 16-ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு வாகனங் களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்த நெடுஞ்சாலையைப் பயன்படுத் தும், ஏராளமான வாகனங்கள் வரி செலுத்தாமல் செல்லும் சூழல் உள்ளது. அதைத் தடுக்கவே இந்த கணக்கெடுப்பை நடத்தினோம். கணக்கெடுப்பு அடிப்படையில் எங்கு புதிய சுங்கச்சாவடி அமைப்பது என்பது பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும். இவ்வாறு நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
வாகன ஓட்டிகள் அதிருப்தி
இந்த புறவழிச் சாலையில் வானகரம் அருகே ஒரு சுங்கச் சாவடி மட்டும் அமைந்திருந்தது. இப்போது கூடுதலாக புழல் அருகிலும் ஒரு சுங்கச்சாவடி அமைத்துள்ளனர். தற்போது, மூன்றாவதாக ஒரு வரிவசூல் மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. 32 கி.மீ. நீளச் சாலையில் 3 இடங்களில் சுங்கவரி வசூலிக்க நினைப்பது ஏற்புடையதல்ல” என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.