‘சத்யபாமாசாட்’ செயற்கைக் கோளை உருவாக்கிய சத்யபாமா பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
பசுமை வாயுக்கள் மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னை சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்கள் புலிநிகால் ரெட்டி, ராகலபள்ளி ரெட்டி தருண், சச்சா ஸ்ரீஹரி, ராஜா பிரீதம், சவுமியா ரஞ்சன்தாஸ் ஆகியோர் இணைந்து ‘சத்யபா மாசாட்’ என்ற செயற்கைக் கோளை சமீபத்தில் உருவாக்கினர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திடம் (இஸ்ரோ) இந்த செயற்கைக் கோள் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி ஒப்படைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ‘சத்யபா மாசாட்’ உட்பட 22 செயற்கைக் கோள்கள் கடந்த ஜூன் 22-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டா வில் இருந்து பிஎஸ்எல்வி - சி 34 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. ‘சத்யபாமாசாட்’ செயற்கைக் கோள், விண்ணில் இருந்து தொடர்ச்சியாக தகவல்களை அனுப்பிய வண்ணம் உள்ளது.
இந்நிலையில், அந்த செயற் கைக் கோளை உருவாக்கிய மாணவ, மாணவிகளுடன் சத்யபாமா பல்கலைக்கழக இயக்குநர் மரிய ஜீனா ஜான்சன், துணைவேந்தர் பி.ஷீலாராணி, உதவி பேராசிரியர் வசந்த் ஆகியோர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தனர். பசுமை வாயுக்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான செயற்கைக் கோளை உருவாக்கியதற்காக மாணவர்களுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.