துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரை இல்லாமல் புதுச்சேரி சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக் கான கூட்டம் தொடங்கியது.
புதுச்சேரி சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் பற்றி அறிவிப்பு வெளிவந்தவுடன் ஆளுநர் கிரண்பேடி தான் உரை யாற்ற அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். அது தொடர்பாக கடிதமும் எழுதினார். ஆனால் முதல்வர் நாராயணசாமி அந்த வேண்டுகோளை நிராகரித்தார்.
புதுச்சேரியில் நேற்று கூடிய சட்டப்பேரவை ஆளுநர் உரை இல்லாமல் நடைபெற்றது. மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, புதுவை முன்னாள் சட்டப்பேரவை தலைவர் வி.எம்.சி.சிவக்குமார், துணைத் தலைவர் ஏ.வி.தரன், தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோர் மறைவு தொடர்பாக முதல்வர் நாராயணசாமி இரங்கல் தீர்மானம் வாசித்தார். அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:
ஜெயலலிதா தனது கருத்தை தைரியமாக பதிவு செய்தவர். தமிழக மக்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தியே அவரது செயல் பாடு இருக்கும். கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் திறப்பதில் அவரது பங்கு அளப்பரியது. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சினைகளில் தமிழகத் தின் நலனை உறுதி செய்தவர். அரசியலில் நெருக்கடி வந்தாலும், தனித்தன்மை வாய்ந்த பெண்ணாக திகழ்ந்தவர். புதுச்சேரியில் ஜெய லலிதா சிலை அமைப்பது தொடர்பாக குழு அமைக்கப்பட்டு பரிசீலிக்கப்படும் என்றார்.
சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, அதிமுக எம்எல்ஏ அன்பழகன், திமுக எம்எல்ஏ இரா.சிவா ஆகியோரும் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டி பேசினர்.
“புதுச்சேரி, காரைக்காலில் பருவமழை பொய்த்ததால் ரூ.100 கோடிக்கு விவசாய உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு குழுவை அனுப்பி அறிக்கை பெற்று கூடுதல் நிதி தரவேண்டும். நீட் தேர்வில் இருந்து புதுச் சேரிக்கு விலக்கு அளிக்க வேண் டும். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும்” என வலியுறுத்தியும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
ஆளுநர் மீது குற்றச்சாட்டு
அதைத் தொடர்ந்து ஆளுநர் செயல்பாட்டை குற்றம்சாட்டி காங்கிரஸ், அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் பேசினர். மாநில அரசு நிர் வாகத்தில் ஆளுநர் கிரண்பேடி தலையிடுவதாகவும் அவரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அப்போது பேசிய முதல்வர் நாராயணசாமி, ‘‘மக்களால் தேர் வான எம்எல்ஏக்களை அவமதிக் கும் வகையில் ஆளுநர் செயல் படக் கூடாது. ஆளுநர் தொடர்பாக தனித் தீர்மானம் மூலம் பேசலாம்” என்றார்.