ஆர்.கே.நகர் தொகுதியில் வாக் காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரின்பேரில் முதல்வர் கே.பழனிசாமி, அமைச்சர்கள், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின்கீழ் வழக்கறிஞர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம் இந்த பதிலை அளித் துள்ளது.
இதையடுத்து தேர்தல் ஆணைய பரிந்துரைப்படி முதல்வர் உள் ளிட்டோர் மீது வழக்கு பதிய உத்தர விடக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவைத் தொடர்ந்து அவர் வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று அறி விக்கப்பட்டிருந்தது. இந்த தொகுதி யில் அதிமுக அம்மா கட்சி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்த நிலையில், வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப் படுவதாக புகார்கள் எழுந்தன.
இதற்கிடையே, தமிழக சுகா தாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கரின் வீடு, அலுவலகம், சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதி உட்பட தமிழகம் முழுவதும் 32 இடங்களில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின்போது ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி அளவுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களில் முதல்வர் பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் சிலரது பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
ஆர்.கே.நகர் தொகுதியில் அளவுக்கு அதிகமாக பணப் பட்டுவாடா செய்யப்பட்டிருப்பது வருமான வரித்துறை விசாரணை யில் தெரியவந்ததால், இடைத் தேர்தலை ஏப்ரல் 10-ம் தேதி தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. நேர்மையாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால் ஆர்.கே.நகரில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வைரகண் ணன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனு அனுப்பி யிருந்தார். அதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப் பட்டு வாடா புகாரின் பேரில் இதுவரை என்னென்ன நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு 8 கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதில், ‘ஆர்.கே.நகர் வாக்காளர் களுக்கு பணப் பட்டுவாடா செய் யப்பட்டது தொடர்பாக முதல்வர் பழனிசாமி, அதிமுக அம்மா கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், செல் லூர் ராஜூ ஆகியோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது’ என்ற கேள்விக்கு மட்டும் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
அந்த பதிலில், ‘ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடா புகார் குறித்து வழக்கு பதிவு செய்ய தேர்தல் நடத்தும் அதிகாரி புகார் அளிக்கலாம் என உத்தரவிட்டு தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
அதைத் தொடர்ந்து பணப் பட்டு வாடா புகார் தொடர்பாக வழக்கறி ஞர் வைரகண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆர்.கே.நகர் தொகுதியில் பணப் பட்டுவாடா புகாரையடுத்து கடந்த ஏப்ரல் 10-ம் தேதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது. அதன்பிறகு, தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக வருமான வரித்துறையினரோ, தேர்தல் ஆணையமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகளை எழுப்பி கடந்த ஏப்ரல் 26-ம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன்.
அதற்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள பதில் கடிதத்துடன், கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பிய கடிதமும் இணைக்கப் பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் அளித்தது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் புகார் செய்ய வேண்டும்’ என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
எனவே, தேர்தல் ஆணைய பரிந்துரைப்படி பணப் பட்டுவாடா குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியும் போலீஸா ரிடம் புகார் அளிக்க உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் விசா ரணை செய்து தொடர்புடைய நீதி மன்றம் முன்பு குற்றப்பத்திரிகை தாக் கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் வைர கண்ணன் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.