தமிழகம்

கேரள அரசைக் கண்டித்து பவானி தடுப்பணை தடுப்புக்குழு ஈரோட்டில் இன்று காத்திருப்புப் போராட்டம்

செய்திப்பிரிவு

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வரும் கேரள அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் ஈரோட்டில் இன்று முதல் தொடர் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்ணை கட்டி வரும் கேரள அரசைக் கண்டித்து பவானி தடுப்பணை தடுப்புக்குழு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி கோவை க.க.சாவடி மற்றும் வாளையாறில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், தற்போது அடுத்த கட்டமாக ஈரோட்டில் காத்திருப்புப் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக ஈரோடு பெருந்துறை சாலை யூஆர்சி நகரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட அனுமதி வழங்கக்கோரி அனுமதி கோரப்பட்டது.

இதுகுறித்து பவானி தடுப்பணை தடுப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் கூறியதாவது:

பவானியில் கேரள அரசு தடுப்பணைகளை கட்டி முடித்து விட்டால், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்கள் நேரடியாக பாசன ரீதியாகவும், குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் சோதனைகளை சந்திக்க வேண்டிய நிலை வரும். எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்து தமிழகத்துக்கான உரிமையையும், பவானி ஆற்றின் உரிமையையும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, பவானியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுப்பதை உள்ளடக்கிய வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும் 21-ம் தேதியன்று விசாரணைக்கு வருகிறது.

இது இறுதிக்கட்ட விசாரணை என்பதால், மத்திய, மாநில அரசுகள் மற்றும் கேரள அரசின் கவனத்தையும், உச்ச நீதிமன்றத்தின் கவனத்தையும் ஈர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், விவசாயிகளைத் திரட்டி பெருந்துறை சாலை யு.ஆர்.சி. நகர் பகுதியில் காத்திருக்கும் தொடர் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். காவல்துறை அனுமதி மறுத்தாலும் நாளை (இன்று 17-ம் தேதி) காலை 9 மணி முதல் போராட்டம் தொடரும், என்றார்.

போராட்டத்திற்கு போலீஸார் அனுமதியோ, மறுப்போ தெரிவிக்கவில்லை. இந்நிலையில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ள இடத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். கோவை சரக டி.ஐ.ஜி. தீபக் டாமோர் நேற்று ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் இது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டார்.

SCROLL FOR NEXT