திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டிருப்பதால் அக்கட்சி மீதான 'குடும்ப அரசியல்' பழி துடைக்கப்பட்டுள்ளது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.
திமுகவிலிருந்து அழகிரி நீக்கப்பட்டது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான ஆரோக்கியமான நடவடிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக, திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளரான அழகிரி இன்று கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: "தந்தை பெரியார் அறிவுறுத்தியபடி, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் கட்டுப்பாட்டிற்கே முதல் முன்னுரிமை என்பதற்கேற்ப அமைந்துள்ள இந் நடவடிக்கை பெரிதும் வரவேற்கத்தக்கது.
குடும்ப அரசியல் நடத்துகிறது தி.மு.க. என்ற பழி இதன்மூலம் துடைக்கப்பட்டுள்ளது. திமுக இதன் மூலம் விஸ்வரூபம் எடுத்துள்ளது". இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.