முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
அதிமுக அம்மா கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு 31 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தினகரன் தான் துணை பொதுச் செயலாளர் என்பதில் அந்த 31 எம்.எல்.ஏக்களும் உறுதியாக உள்ளனர்.
இதனிடையே பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ''அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தான் தொடர்கிறார். அவர் இருப்பதில் என்ன சிக்கல் இருக்கப் போகிறது. டிடிவி தினகரனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பதில் எந்த தவறும் இல்லை. விரைவில் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து அதிமுக ஒன்றாகும்'' என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையில் அமைச்சரவை கூட்டம வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு நடக்கிறது. சட்டமசோதாக்கள் தவிர, எம்எல்ஏக்கள் அளித்துள்ள கோரிக்கைகள், செயல்பாட்டில் உள்ள பொதுத்திட்டங்கள், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அறிவிப்புகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.