தினந்தோறும் உடுத்தி மகிழ, பெண்களுக்கு எத்தனை ரக ஆடைகள் நாள்தோறும் அறிமுகமானாலும், விழாக்களில் பெண்களுக்கு தனி மரியாதையை ஏற்படுத்தி கொடுப்பது சேலைகள்தான். அதிலும் காட்டன் சேலைகள் தனி இடம் பிடித்துள்ளன.
நெகமம் காட்டன் சேலை, தமிழகத்தில் உற்பத்தியாகும் கைத்தறி சேலைகளில், தலைமுறைகள் பல கடந்து இன்றளவும் பேசப்படும் உலகத்தரமிக்க தயாரிப்பு. வெளிநாடுகளுக்கு அதிகரிக்கும் இதன் ஏற்றுமதியே அதற்கு சாட்சியாக அமைந்துள்ளது.
தனி முத்திரை
தமிழகத்தில், மதுரை, சேலம் பகுதி நெசவாளர்கள் கலைநயத்துடன் தயாரிக்கும் கைத்தறி சேலைகள், கண்டாங்கி சேலை, சின்னாளப்பட்டி சேலை, உறையூர் சேலை, சுங்குடி சேலை, செட்டிநாடு சேலைகள் என பல்வேறு இடங்களில் பல ரகங்களில் சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. அதற்கு இணையாக நெகமம் சேலைகள் தனி முத்திரை பதிக்கின்றன. இங்கு அழகிய வடிவமைப்பில் நெய்யப்படும் சேலைகளுக்கு தரமான நூல்கள் பயன்படுத்துவதால், சேலையின் தரம் குறையாமல் பெண்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள நெகமம் மற்றும் 30-க்கும் மேலான சுற்றுவட்டார கிராமங்களில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கைத்தறி சேலைகள் நெய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் பல்வேறு நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளனர். இங்கு உற்பத்தியாகும் பருத்தி நூல் கைத்தறி சேலைகள் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேல் நீடிக்கிறது என்பதால், இதனை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். பல வண்ணங்களில், காலத்துக்கேற்ற புதிய வடிவமைப்புகளுடன், தரமான கெட்டிநூல்கள் கொண்டு, அனுபவமிக்க நெசவாளர்களால் கைத்தறி நெசவில் தயாரிக்கப்படுவதால், கடல் கடந்தும் தமிழர்களின் விருப்பத்தைப் பெற்றுள்ளது.
காட்டன் சேலைகள் உடலை பாதுகாக்கும் கவசங்களாக உள்ளன என்பதால் இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. நெகமம் பகுதியில் தயாரிக்கப்படும் சேலைகள் கோவை காட்டன் சேலை ரகம் என்ற பெயரில் வெளிநாடுகளில் விற்பனையாகின்றன. இங்கு உற்பத்தியாகும் காட்டன் சேலைகள், 600 முதல் 1600 கிராம் வரை எடையுள்ளவை. இந்த ரகங்கள் ரூ.1,500 முதல் 2,500 வரை விற்பனையாகின்றன.
இது குறித்து 4 தலைமுறையாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் எம்.கந்தசாமி கூறியதாவது:
‘வெள்ளாவியில் வைத்தாலும் வெளுக்காத புடவை நெகமம் காட்டன் புடவை’ என பெயரெடுத்த நெகமம் காட்டன் சேலைகளை நெய்யும் கடைசி தலைமுறை இதுதான். நெசவுத் தொழில் செய்ய இன்றைய தலைமுறைக்கு விருப்பமில்லை, அதற்கு காரணம், கட்டுப்படியாகாத கூலி. படித்து வேலைக்குச் செல்லும் மனநிலை உடைய இளைய தலைமுறை, விலைவாசி உயர்வுக்கேற்ற போதிய வருமானம் இல்லாததால், காட்டன் சேலைகள் நெய்த தறியில் தற்போது மென்பட்டுப் புடவைகள் ஒடுகின்றன என்றார்.
ஸ்ரீசௌடாம்பிகா பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் மேலாளர் அண்ணாதுரை கூறியதாவது: பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகா அடங்கிய பொள்ளாச்சி சரகத்தில் 100-க்கும் மேற்பட்ட தனியார் உற்பத்தியாளர்கள் மற்றும் 15 கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இளம்பெண்களிடம் காட்டன் சேலைகளுக்கு வரவேற்பு அதிகரித்து உள்ளது. தற்போது 40 சதவீதம் மட்டும் உற்பத்தி உள்ளது. தேவை பல மடங்கு அதிகரித்து உள்ளது. தற்போது அரசு, அடிப்படை கூலியாக ரூ115.75-ம், அகவிலைப்படியாக ரூ.144.69-ம் முந்தி, பாவு, பார்டர் வடிவமைப்பு ஆகியவற்றை பொருத்து இதர கூலியையும் நிர்ணயித்துள்ளது. சாதாரண சேலைக்கு ரூ.720 வரையும், பிற சேலைகளுக்கு ரூ.1100 வரையும் கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
இப்பகுதி நெசவாளர்கள் கூறியதாவது: நெகமம் காட்டன் சேலைகள் என்ற பெயரில் போலிகள் சந்தைப்படுத்தப்படுகின்றன. அதனை தடுக்க நெகமம் காட்டன் சேலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்றனர்.