திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் விபரீத விளை யாட்டுகள் வேண்டாம் என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு திமுக எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளை விரட்டி விட்டு, அவரது போயஸ் கார்டன் இல்லத்தை கபளீகரம் செய்து அமர்ந்திருக்கும் டிடிவி தினகரனுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினைப் பற்றி விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை. பத்திரிகையாளர் சந்திப் பில் நாக்குத் தவறி தவறுதலாக வரும் வார்த்தைகளுக்கு உள் நோக்கம் கற்பித்து அறிக்கை விடுவது ஆரோக்கியமான அரசி யல் அல்ல.
ஸ்டாலினை விமர்சித்தாவது அதிமுகவுக்குள் ஆக்கிரமித்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியுமா என திட்டமிட்டு செயல்படுகிறார் தினகரன். பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடும் அறிக்கைகளால் அதிமுகவுக்குள் தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ என்ற பதற்றத்தில் ஸ்டாலினை விமர் சித்து தினகரன் அறிக்கை விட்டுள்ளார். ஸ்டாலினை விமர்சிப்பது, ஆழம் தெரியாமல் காலை விட்டு மூழ்கிய கதையாக போய்விடும் என்பது அவர் உணர வேண்டும்.
அந்நியச் செலவாணி மோசடி போன்ற வழக்குகளில் அவருக்கு அனுபவம் இருக்கலாம். ஆனால், அரசியலில் அனுபவம் போதாது. அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத தினகரன், எப்படி துணைப் பொதுச் செயலாளராக முடியும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கேள்வி எழுப்பி யுள்ளனர். இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.
அதிமுக தொண்டர்களால் மதிக்கப்படாத தினகரன், விரைவில் அந்தக் கட்சி தொண் டர்களால் விரட்டப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஸ்டாலினிடம் இதுபோன்ற விபரீதமான விளையாட்டுகள் வேண்டாம் என அவரை எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு துரை.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.