தஞ்சாவூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் டிராக்டர் கடனுக்கான தவணை செலுத்தத் தவறிய விவசாயியை, போலீஸார் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் காவிரி டெல்டா விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாலன்(50). கடந்த 2011-ல் தஞ்சையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.3.80 லட்சம் கடன் பெற்று, டிராக்டர் வாங்கியுள்ளார். இந்தக் கடனுக்காக தலா ரூ.64 ஆயிரம் வீதம் 6 தவணைகளைச் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில், கடைசி 2 தவணைகள் நிலுவை இருந்த தாகவும், நெல் அறுவடை முடிந்த பின்னர் தவணைத் தொகையைச் செலுத்துவதாகவும் தெரிவித்துள் ளார். ஆனால், நிதி நிறுவன ஊழியர்கள், ரூ.32 ஆயிரத்தை முதலில் செலுத்துங்கள் என்று கூறி, அந்த தொகையைப் பெற்றுள் ளனர். சில நாட்கள் கழித்து அவரது டிராக்டரை ஜப்தி செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 4-ம் தேதி அறுவடையில் பாலன் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த பாப்பாநாடு காவல் நிலைய ஆய்வாளர் குமாரசாமி மற்றும் நிதி நிறுவன ஊழியர்கள், டிராக்டரில் இருந்து பாலனை கீழே தள்ளி, சரமாரியாக அடித்துள்ளனர். பின்னர் அவரைக் காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றதுடன், டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்கவும், அவரை விடுவிக்கவும் அவரது உறவினர்களிடம் போலீஸார் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவரை விடுவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில், டிராக்டரில் அமர்ந்திருந்த விவசாயி பாலனை கீழே தள்ளி, அடித்து, இழுத்துச் சென்ற வீடியோ பதிவு வாட்ஸ்அப் மூலம் நேற்று பரவியது. இது, டெல்டா விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. தகவலறிந்த தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பாலனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், ஒரத்தநாட்டில் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஒரத்தநாடு வட்டாட்சியர், டிஎஸ்பி ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விவசாயி தாக்கப்பட்டதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர், இன்று (மார்ச் 10) போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகி வெ.ஜீவக்குமார் கூறும்போது, “தனியார் நிதி நிறுவனங்கள் கூலிக்கு ஆட்களை நியமித்து, சட்டத்துக்குப் புறம்பாக, விவசாயிகளின் டிராக்டர் போன்ற வாகனங்களைப் பறிமுதல் செய்கின்றன. இதை, உச்ச நீதிமன்றம் வன்மையாகக் கண்டித்துள்ளது. விவசாயக் கடன் தாவாவில், போலீஸார் நேரடியாக தலையிட்டது சட்டப்படி குற்றம். விவசாயியை அடித்து இழுத்துச் சென்ற நிதி நிறுவன ஊழியர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட போலீஸாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்” என்றார்.