காபி, கஃபைன் அதிகம் உள்ள பானம் மற்றும் எனர்ஜி சோடா ஆகியவற்றை அடுத்தடுத்து எடுத்துக் கொண்ட அமெரிக்க இளைஞர் ஒருவர் மாரடைப்பினால் மரணமடைந்தது அங்கு இத்தகைய பொருட்களை நுகர்வது குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.
டேவிஸ் ஆலன் கிரைப் என்ற இந்த பதின்ம வயது இளைஞர் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி மாரடைப்பினால் மரணமடைந்தார். இவரது மருத்துவக் குறிப்பில், “கஃபைனினால் தூண்டப்பட்ட இருதய நிகழ்வு இருதயப் படபடப்பை அதிகரித்து கடைசியில் இருதய செயலிழப்புக்கு வித்திட்டது” என்று கூறியுள்ளது.
இவர் இறப்பதற்கு 2 மணி நேரம் முன்னதாக காஃபி, மவுண்டன் டியூ என்ற பானம், மற்றும் ஒரு எனர்ஜி சோடா ஆகியவற்றை அருந்தியுள்ளார். ஆனால் இதனால் மரணம் ஏற்படுவது மிகவும் அரிதான ஒன்றே என்று ரிச்லாண்ட் கவுண்டி கரோனர் கேரி வாட்ஸ் தெரிவித்துள்ளார்.
“மிக விரைவாக அவர் எடுத்துக் கொண்ட கஃபைன் அளவு, அவரது இருதயத்தைச் செயலிழக்கச் செய்துள்ளது” என்கிறார் வாட்ஸ். அடுத்தடுத்து இவர் கஃபைன் அதிகமுள்ள பானங்களை எடுத்துக் கொண்டதால் ‘அரித்மியா’ ஏற்பட்டுள்ளது. அரித்மியா என்றால் சீரற்ற இருதய துடிப்பு. ஒன்று இருதயம் அளவுக்கு அதிகமாக துடிக்கும் அல்லது மிகக்குறைவான துடிப்பைக் கொண்டிருக்கும். நிமிடத்திற்கு 100 துடிப்புகளுக்கு மேல் இருந்தால் அது ‘டேகிகார்டியா’ (tachycardia) என்றும் நிமிடத்திற்கு 60க்கும் குறைவாக துடிப்பு குறைந்தால் அது ‘பிராடிகார்டியா’ (bradycardia) என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக ஆபத்தற்றதாகவே கருதப்பட்டாலும், சில வேளைகளில் முன் அறிகுறி காட்டாமல் மாரடப்பையோ, இருதய செயலிழப்பையோ ஏற்படுத்தக்கூடியது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் நாளொன்றுக்கு 400 மிலி கிராமுக்குக் கூடுதலாக கஃபைன் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று எச்சரித்துள்ளது. அதாவது நாளொன்றுக்கு 5 கோப்பைகளுக்கு மேல் காப்பி அருந்தக் கூடாது, என்றும் பெற்றோர் கஃபைன் ஆபத்துகளை குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.
இறந்த டேவிஸ் ஆலன் கிரைப்பின் தந்தை திங்களன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, தன் மகன் மருந்துகள் மற்றும் மதுபான வகைகளில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார் என்றார்.
“கார் விபத்து என் மகனின் உயிரைப் பறிக்கவில்லை. மாறாக எனர்ஜி ட்ரிங்க் என் மகன் உயிரைக் குடித்தது” என்றார் மகனை இழந்த தந்தை சான் கிரைப்.
ஆல்கஹால் அல்லாத பானங்கள் தொழிற்துறையில் எனர்ஜி ட்ரிங்குகள் சிறிய அளவே இருந்தாலும் இளைஞர்களிடம் அமெரிக்காவில் எனர்ஜி டிரிங்க் மிகவும் பிரபலம்.
இருதய நிபுணர்கள் ஏற்கெனவே கஃபைன் கலந்துள்ள பானங்களை அதிகம் எடுத்துக் கொள்வது இருதயத்தை பாதிக்கும், உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர்.
எனெர்ஜி ட்ரிங்குகளில் 240 மிலி கிராம் கஃபைன் கலந்திருக்கும் என்று 2012 நுகர்வோர் அறிக்கை ஆய்வு கூறியுள்ளது.