தமிழகம்

கூலிப்படையினர் கொட்டமடிக்கும் நகரமாக மாறி வருகிறதா சென்னை?- அரசுக்கு கருணாநிதி கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை மாநகரம் கூலிப் படையினர் கட்டுப்பாடின்றிக் கொட்டமடித்துக் கொண்டாடும் நகரமாக மாறி வருகிறதா என தமிழக அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "சென்னை மாநகரத்திலும் அதன் சுற்றுப் புறங்களிலும் கடந்த பத்து நாட்களில் மட்டும் நடந்த பட்ட பகல் படுகொலைகள், கொள்ளைச் சம்பவங்கள், செயின் பறிப்பு நிகழ்வுகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது, காவல் துறை என்று ஒன்று இருக்கிறதா; அது முறையாக விழிப்போடு செயல்படுகிறதா? அல்லது பொதுத் தேர்தல் பணியோடு தாங்கள் ஆளுங்கட்சிக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் முடிந்து விட்டதாக அவர்கள் கருதி அரிதுயிலில் ஆழ்ந்து விட்டார்களா என்று தான் எவருக்கும் எண்ணத் தோன்றும்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் "தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ நடவடிக்கைகள் எடுக்கப்படும். காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு யாருடைய தலையீடும் இன்றி சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்பதால் தமிழகத்தில் பொது அமைதி சிறப்பாகப் பாதுகாக்கப்படுகிறது.

எவ்வித அச்ச உணர்வு இல்லாமலும் தங்களது சொத்துக்களை பிறர் அபகரித்து விடுவார்களோ என்னும் பயம் இல்லாமல் வாழ்வதற்கேற்ற சூழல் தொடர்ந்து பாதுகாக்கப்படும். குற்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து குறைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றெல்லாம்உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அந்த உறுதியைக் காப்பாற்றும் லட்சணம் இது தானா?

முதல் கோணலால், முற்றிலும் கோணலாகி விடாதா? ஆட்சியின் தொடக்கத்திலேயே சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்றுவதில் இவ்வளவு பெரிய தொய்வு ஏற்பட அனுமதிக்கலாமா?

சென்னை மாநகரம், கூலிப் படையினர் கட்டுப்பாடின்றிக் கொட்டமடித்துக் கொண்டாடும் நகரமாக மாறி வருகிறதா? என்ற வினாக் கணைகள் அனைவருடைய நெஞ்சத்தையும் துளைத்து வேதனைப்படுத்துவது இயல்பானது தானே?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

          
SCROLL FOR NEXT