தமிழகம்

வனச்சட்டங்கள் குறித்து நாட்டிலேயே முதல் முறையாக முதுமலையில் நீதிபதிகளுக்கு பயிற்சி முகாம்

செய்திப்பிரிவு

இந்தியாவில் முதல் முறையாக நீதிபதிகளுக்கு, வனச் சட்டங்கள் குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் முதுமலையில் நேற்று தொடங்கியது.

உலகில் உள்ள 8 உயிர்ச்சூழல் மண்டலங்களில், தமிழகத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை முக்கிய உயிர்ச்சூழல் மண்டலமாக விளங்குகிறது. ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வரும் இந்த வனப்பகுதிகளில் வனக் குற்றங் களும் அதிகரித்து வருகின்றன. அவ்வாறு வனக் குற்றங்களில் ஈடுபடுபவர்களை வனத்துறையினர் பிடித்து நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும்போது குற்றவாளிகள் விடுதலை ஆவதற்கு வாய்ப்புகளும் உள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் பணிபுரிந்து வரும் நீதிபதிகள் வனச் சட்டங்கள் குறித்து நேரடியாக அறிந்து கொள்வதற்காக இந்தியாவில் முதன் முறையாக முதுமலையில் பயிற்சி மற்றும் களப் பயிற்சி முகாம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் நேற்று தொடங்கியது.

தமிழக நீதித்துறை பயிலகம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக வனத்துறை இணைந்து நடத்தும் இந்த பயிற்சி முகாமை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் தொடங்கி வைத்தார்.

நீதிபதி சதீஷ்குமார் கூறும்போது, ‘2015-ம் ஆண்டு பணியில் சேர்ந்த 150 நீதிபதிகளில் முதற்கட்டமாக 32 நீதிபதிகள் இந்த முகாமில் கலந்து கொண்டுள்ளனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில், இன்றைய காலகட்டத்தில் வனப் பகுதியின் முக்கியத்துவம், வனச்சூழல் நிலை, வனக்குற்றங்கள், அவற்றை தடுக்க வனத்துறை ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது’ என்றார்.

இதையடுத்து, முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் உள்ள ஒம்பெட்டா, மாயார் மற்றும் சிங்காரா வனப் பகுதிகளுக்கு நீதிபதிகள் அழைத்துச் செல்லப்பட்டு நேரடியாக களப் பயிற்சி அளிக்கப்பட்டது.

முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ஆர். ரெட்டி, துணை இயக்குநர் ஏ.சரவணன் மற்றும் வனத்துறையினர் பயிற்சி அளித்தனர்.

இனிவரும் காலங்களில் விசா ரணைக்கு வரும் வனக் குற்றங்கள் சம்பந்தபட்ட வழக்குகளை கையாளுவது நீதிபதிகளுக்கு எளிதாக இருக்கும் என்பதும் தமிழகத்தில் இது போன்ற பயிற்சி முகாம் நடைபெறுவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT