தமிழகம்

முடங்கியது காமராஜர் பல்கலைக்கழகம்: துணைவேந்தர் இல்லாததால் முடிவு எடுப்பதில் தாமதம்

என்.சன்னாசி

காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதால் முக்கிய முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளதால் கல்வித்தரம் பாதிக்க வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

தென்மாவட்ட மாணவர்கள் உயர்கல்வி, ஆராய்ச்சி வாய்ப்புகளை பெறவேண்டும் என்ற உயரிய நோக்கில் 1966-ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. 22 பள்ளிகள் (பிரிவுகள்). இவற்றின் கீழ் 85 துறைகள், பயோ டெக்னாலஜி உட்பட 8 மையங்களும் செயல்படுகின்றன. மாலை நேர கல்லூரிகள் உட்பட100-க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்றன. தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடத்தில் இளநிலை (எம்.பில்), தமிழ், ஆங்கிலம், விலங்கியல், உயிர் வேதியியல், மூலக்கூறு உயிரியல் துறைகளில் பி.எச்டி ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன. இங்குள்ள ஸ்கூல் ஆப் பயலாஜிக்கல் மையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது.


பராமரிப்பு இன்றி வறண்டு கிடக்கும் பல்கலை. வளாக பூங்கா.

துணைவேந்தர்கள்

இந்த பல்கலைக்கழகத்தில் இதுவரை 15 துணைவேந்தர்கள் பணிபுரிந்துள்ளனர். 15-வது துணைவேந்தராக இருந்தவரும், முதல் பெண் துணைவேந்தருமான கல்யாணி மதிவாணன் பணிக்காலம் 2015 ஏப். 8-ல் முடிவடைந்தது.

அதன்பின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கென ஓய்வு பெற்ற சென்னை பேராசிரியர் முருகதாஸ் தலைமையில் பேராசிரியர்கள் ஹரிஸ் மேத்தா, செனட் உறுப்பினரான ராமசாமி (மதுரை) அடங்கிய மூவர் குழுவை உயர் கல்வித்துறை அமைத்தது. துணைவேந்தர் தேர்வில் ஒருதலைபட்சமான முடிவால் தேடல் குழுவில் இருந்து ராமசாமி 2016 பிப்.10-ல் ராஜினாமா செய்தார். துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் பணி தாமதமடைந்தது. 2016 நவ.30-ல் தேடல் குழுவுக்கு புதிய உறுப்பினராக ஓய்வுபெற்ற மதுரை பேராசிரியர் ராமகிருஷ்ணன் தேர்வானார். மூவர் அடங்கிய பட்டியலை உயர்கல்வி செயலருக்கு தேடல் குழு அனுப்பியது. அதன் மீது இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பட்டியலிலும் சர்ச்சை எழுந்ததால் கிடப்பில் உள்ளது.

முடங்கிய நிர்வாகம்

பல்கலைக்கழகத்தின் நிர்வாக ரீதியான பணிக்கு துணைவேந்தர் பதவி மிக முக்கியம். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாததால் காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. பதிவாளர், தேர்வாணையர் போன்ற முக்கிய பதவிகளிலும் பொறுப்பு அதிகாரிகளே இருப்பதால் முக்கிய நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. மாணவர் சேர்க்கை, உதவித்தொகை பெறுதல், ஆய்வு மாணவர்களுக்கு மதிப்பீடு திறன் (வைவா) நடத்துதல், பட்டமளிப்பு விழா நடத்துவது போன்ற பல்வேறு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.


கடந்த 2 ஆண்டுகளாக காலியாக இருக்கும் பல்கலை. வளாகத்தில் உள்ள துணைவேந்தருக்கான இல்லம்.


பூட்டிக்கிடக்கும் துணைவேந்தர் இல்லத்தின் முகப்பு பகுதி.

பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்களின் பதவி உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. வகுப்பறைகளுக்கு போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர முடியவில்லை. நிதி தொடர்பான சில முடிவுகளை எடுக்க முடியவில்லை. நிதி நெருக்கடியில் நிர்வாகம் சிக்கி தவிக்கிறது. துணைவேந்தர் கையெழுத்திட்ட பட்டச் சான்றுகளை பெற முடியவில்லை. இச்சான்றிதழ் இன்றி தமிழகம், பிற மாநிலம், வெளிநாடுகளில் மேல்படிப்பில் சேர முடியாமலும், பணிகளில் சேர இயலாமலும் தவிப்பதாக பாதிக்கப்பட்டோர் புகார் கூறுகின்றனர்.

உயர் கல்வி செயலர் மூலம் சில அவசர கோப்புகள், பட்டப்படிப்பு சான்றுகளில் கையெழுத்திட்டு வழங்கப்படுகிறது என்றாலும், அதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற முக்கிய ஆவணங்களில் கையெழுத்து பெற ஒவ்வொரு முறையும் பல்கலைக்கழக அலுவலர்கள் சென்னைக்கு செல்லவேண்டியுள்ளது.

இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையும் பாதிக்கும் என்ற அச்சம் உள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தை சீரமைக்க தகுதியான துணைவேந்தரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்பதே மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள், கல்வியாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

நிர்வாகத்தில் பாதிப்பில்லை

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) ஜி.ஆறுமுகம் கூறியதாவது:

பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாத நிலையில் கன்வீனர் கமிட்டி நிர்வாகப் பணிகளை மேற்கொள்கிறது. நிர்வாக ரீதியான அனைத்து பணிகளும் தொய்வின்றி நடக்கின்றன.

பட்டமளிப்பு விழா குறித்து பல்கலைக்கழகத் தேர்வாணையர் முடிவெடுப்பார். காமராஜர் பல்கலை. தொடர்பான கோப்புகள் மீது உயர் கல்வித் துறை செயலர் தாமதமின்றி நடவடிக்கை எடுக்கிறார். துணைவேந்தராக யாரை நியமிப்பது என முடிவு செய்வது ஆளுநர் கையில் இருக்கிறது.

துணைவேந்தரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் புகுந்ததால் பாதிப்பு

முன்னாள் பேராசிரியர் விவேகானந்தன் கூறியது: இப் பல்கலை.யில் 2 ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாததால் பேராசிரியர்கள், பணியாளர்கள் பதவி உயர்வு பெற முடியாமலும், ஆய்வு மாணவர்கள் கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தவிக்கின்றனர். கன்வீனர் கமிட்டி நிர்வாகத்தை கவனித்தாலும் சில முக்கிய முடிவுகளை எடுக்க முடியாது. மதுரை உட்பட 4 பல்கலைக்கழகங்களின் கோப்புகளை உயர்கல்வி செயலர் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால், நிர்வாக ரீதியான பணிகள் அனைத்தும் தாமதமடைகின்றன. தற்போதைய ஆளும் அரசு ஆட்சியை தக்க வைப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறது. மாணவர்கள் பற்றி கவலைப்படவில்லை. துணைவேந்தர் நியமனத்தில் சாதி ரீதியான பரிந்துரையும், அரசியலும் புகுந்ததால்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.

காத்திருக்கும் ஆராய்ச்சி மாணவர்கள்

இப்பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாததால், கடந்த 2 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எம்.பில்., பி.எச்டி ஆராய்ச்சி முடித்த 300-க்கும் மேற்பட்டோர் மதிப்பீடு நேர்காணல் (வைவா) தேர்வுக்கு காத்திருக்கின்றனர். பல்கலை. உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.15 ஆயிரமாக ஊதியம் உயர்த்தப்பட்டது. ஆனால், தற்போதுவரை அத்தொகை வழங்கப்படவில்லை. இவர்கள் மாதந்தோறும் தாமதமின்றி சம்பளம் பெற முடியவில்லை.

நிதி கிடைப்பதில் சிரமம்

பேராசிரியர் நலச் சங்கத் தலைவர் வி.கலைச்செல்வன் கூறியது: கடந்த ஆண்டு 85 துறைகளில் 800 மாணவர்கள் சேர்ந்தனர். இம்முறை மாணவர் சேர்க்கை பாதியாக குறைய வாய்ப்புள்ளது. இந்திய அளவில் இப் பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி துறை முதலிடத்தில் இருந்தது. இத்துறைக்கு வந்த நிதியை, துணைவேந்தர் இல்லாததால் திருப்பி அனுப்பியுள்ளனர். 300 பேர் பி.எச்டி முடித்து வைவாவுக்காக காத்திருக்கின்றனர். துணைவேந்தர் எடுக்க வேண்டிய முடிவுகளை, பொறுப்பு அதிகாரிகள் எடுப்பதால் நிர்வாகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.300 கோடி மத்திய, மாநில நிதி கிடைக்கும். அதை கேட்டு பெற முடியாமல் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக விதிப்படி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக பழைய பாடத்திட்டத்திலேயே வகுப்பு எடுக்கிறோம். மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலித்துவிட்டு, நூலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் வாங்கவில்லை. இதனால், ஆங்கிலத்துறைக்கு எனது செலவில் ரூ.1 லட்சத்துக்கு புத்தகங்கள் வாங்கியுள்ளேன்.

சில துறைகளுக்கு நூலகம், வகுப்பறைகளே இல்லை. 60 துறைகளில் பேராசிரியர்கள் அந்தஸ்தில் துறைத்தலைவர்கள் இல்லை. அசோசியேட் பேராசிரியர்களே துறைத் தலைவர்களாக உள்ளனர். இது போன்ற பல்வேறு பிரச்சினைகளால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கிறது. பல்கலை. பொறுப்பு அதிகாரிகள், பொறுப்பின்றி செயல்படுகின்றனர். அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவில்லை. துணைவேந்தரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றார்.

பல்கலை.யில் சேர மாணவர்கள் தயக்கம்

கடந்த காலங்களில் இப்பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.சி.ஏ., எம்.பி.ஏ., பயோ டெக்னாலஜி துறையில் சேர்வதற்கு மாணவர்களிடையே போட்டி இருந்தது. கேரளா உள்ளிட்ட வெளிமாநில மாணவர்களும் இங்கு பயில வந்தனர். தற்போது ஆராய்ச்சி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இங்கு சேர்வதற்கு மாணவர்கள் தயங்குகின்றனர். ஆய்வக வசதியிலும் குறைபாடு இருப்பதால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை எதிர்பார்த்த அளவு இருக்காது என்று பேராசிரியர்கள் சிலர் கூறினர்.


தொலைநிலைக் கல்வித் துறைக்கான கட்டிடத்தின் முகப்பு பகுதி

SCROLL FOR NEXT