இறை நம்பிக்கை உள்ளவர்களை எந் தத் துன்பமும் அணுக முடியாது என முதல் வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் முதல்வர் பேசியதாவது:
ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்ப தன் மூலம் அகமும், புறமும் தூய்மை அடைகிறது. அதன்மூலம் இறைப்பற்றும் அன்பும் மேலோங்குகிறது. தர்ம சிந்தனை தழைத்தோங்குகிறது. இதனால் இறைவனின் அருளைப் பெற முடிகிறது.
நபிகள் நாயகத்தின் போதனை களைப் பிடிக்காத எதிரிகள் அவரை கொல்ல திட்டமிட்டனர். ஒருநாள் இரவில் கொலை முற்சியில் இருந்து தப்பித்து நண்பரின் இல்லத்துக்கு நபிகள் நாயகம் வந்தார். அவரை தெளர் என்ற மலைக் குகைக்கு அழைத்துச் சென்றனர். எதிரிகள் அந்த இடத்தையும் மோப்பம் பிடித்து வந்துவிட்டனர்.
அப்போது நபிகள் நாயகத்தின் நண்பர் அவரிடம், ‘‘எதிரிகள் நம்மை கண்டுபிடித்து விட்டனர். அவர்களிடம் சிக்கி இறப்பது உறுதி’’ என்றார். அப்போது நபிகள் நாயகம், ‘‘தோழரே பயப்பட வேண்டாம். எல்லாம் வல்ல இறைவன் நம்மோடு இருக்கிறார். எனவே, அச்சம் என்ற சொல்லுக்கே அவசியமில்லை’’ என்றார்.
அப்போது எதிரிகள் குகைக்கு அருகில் வந்தனர். ஆனால், எதிரிகள் உள்ளே நுழைவதற்குள் நுழைவாயிலில் சிலந்தி வலை பின்னிவிட்டது. 2 புறாக்கள் படுத்திருந்தன. அதைப் பார்த்த எதிரிகளில் ஒருவன், ‘‘நாம் தேடி வந்தவர்கள் இங்கே இருந்தால் சிலந்தி வலை அறுபட்டிருக்க வேண்டும். புறாக்களும் இருக்காது. எனவே, அவர்கள் இங்கே இருக்க வாய்ப்பே இல்லை’’ என கூறினார். அதை ஏற்ற மற்றவர்கள் திரும்பிச் சென்றனர்.
இறைவனை எப்போதும் உள்ளத்தில் கொண்டுள்ளவர்கள், இறைவனால் காக்கப்படுவார்கள். இறைப்பற்று உள்ளவர்களை எந்தத் துன்பமும் அணுகாது. எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு மனிதநேயம் இருக்கும். எங்கு மனிதநேயம் இருக்கிறதோ அங்கு ஒற்றுமை நிலவும். அறம் தழைக்கும். ஏழ்மை விலகும். நன்மை பெருகும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
சன்னி பிரிவு தலைமை ஹாஜி சலாவூதின் முகமது அயூப், ஷியா பிரிவு தலைமை ஹாஜி குலாம் முகமது மெஹடிகான், அண்ணா சாலை தர்கா அறங்காவலர் ஹாஜி சையத் மொய்னுதீன், ஆற்காடு நவாப் முகமது அப்துல் அலி, அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன், சமக தலைவர் சரத்குமார், மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன், மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பேராயர் மா.பிரகாஷ் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.