சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்த சிறுவனுக்கு தொடர்ந்து மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நீலாங்கரை அருகேயுள்ள வெட்டுவாங் கேணியைச் சேர்ந்தவர் சபினா பேகம். கணவரை இழந்த அவர், 3 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். அவரது 15 வயது மகன் தமீம் அன்சாரி கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் விசாரணை ஒன்றுக்காக நீலாங்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமீம் அன்சாரி துப்பாக்கியால் வாய்க்குள் சுடப்பட்டதால் படுகாயமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து பெரும்பாக்கம் குளோபல் மருத்துவ
மனையில் தமீம் அன்சாரி அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் சபினா பேகம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். “காவல் நிலையத்தில் ஆய்வாளர் புஷ்பராஜ் என்பவர் எனது மகனை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் தனியார் மருத்துவமனையிலேயே தொடர்ந்து எனது மகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்” என்று அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோ ரைக் கொண்ட அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுவன் தமீம் அன்சாரியின் உடல் நிலை இன்னும் சீராக வில்லை.அதனால் அவர் மிகவும் கஷ்டப்படுவதாகவும், ஆகவே அவருக்கு அதே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை தர வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
எனினும், தமீம் அன்சாரி உடல் நிலை தேறிவிட்டதாகவும், அவரை மருத்துவமனையிலிருந்து விடுவித்து, அவ்வப்போது வெளி நோயாளியாக சிகிச்சை அளிக்கலாம் என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி காவல் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு பிப்ரவரி 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும், அதுவரை சிறுவன் தமீம் அன்சாரியை குளோபல் மருத்துவமனையிலேயே தங்க வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்குமாறும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.