தமிழகம்

ஏற்காடு இடைத்தேர்தலில் கட்சிகளுக்கு கட்டுப்பாடு - நாளை வேட்புமனு தாக்கல்

எஸ்.சசிதரன்

ஏற்காடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் சனிக்கிழமை துவங்குகிறது. இதற்கிடையே, 18 வயதுக்குக் குறைவானவர்கள் அனைவரும் சிறார் என்றும், அவர்களை அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்தக்கூடாது என்றும் தலைமை தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஏற்காடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சி.பெருமாள் மறைந்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு வரும் டிசம்பர் 4-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல், சனிக்கிழமை தொடங்குகிறது.

இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆளும் அதிமுகவும், திமுகவும் ஏற்கெனவே அறிவித்து, பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டன. தேமுதிகவும் வேட் பாளரை விரைவில் அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தலில் போட்டி யிட விரும்புவோர், வரும் 16-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது. அதன்

பிறகு, வேட்புமனுக்கள் பரிசீலனை 18-ம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி நவம்பர் 20 என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு டிசம்பர் 4-ம் தேதி நடை பெறும். வாக்குகள், டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்படுகின்றன.

தேர்தலுக்குப் பயன்படுத்தப்படவுள்ள வாக்கு இயந்திரங்கள் மற்றும் கன்ட்ரோல்யூனிட்களின் முதல்கட்டச் சோதனையைத் தேர்தல் துறையினர் ஏற்கெனவே முடித்துவிட்டனர். வேட்பாளர்களுக்குத் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்ட பிறகு, வாக்குப் பதிவு இயந்திரங்களின் இறுதிக்கட்டச் சோதனை மேற்கொள்ளப்படும். இந்த இடைத்தேர்தலைப் பார்வையிட இரு மத்தியப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்களுக்குத் தடை

அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையம், நவம்பர் 6-ம் தேதி ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில், “பிரசாரத்துக்கோ, வேறு எந்த விதத்திலோ தேர்தல் பணிகளுக்காக, 18 வயதுக்குக் குறைந்த சிறுவர், சிறுமியரை அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, 14 வயது என்று இதுவரை இருந்த சிறார்களுக்கான வயதை, 18 ஆக உயர்த்தியிருப்பதையும் தேர்தல் ஆணையம் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, 18 வயதுக்குக் குறைந்தவர்களைத் தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்தினால் கட்சிகள் மீது நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT