சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற வேளாண்மை, கால்நடை பராமரிப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் எம்.தமிமுன் அன்சாரி, ‘‘பிராய்லர் கோழி மக்களின் முக்கியமான உணவாக மாறியுள்ளது. குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை விரும்பி உண்கின்றனர். ஆனால், பிராய்லர் கோழி சாப்பிடுவதால் உடல் நலனுக்கு ஆபத்து ஏற்படும்; நோய்கள் வரும் என சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இதனால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். எனவே, இது உண்மையா என்பதை தமிழக அரசு ஆராய்ந்து தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, ‘‘பிராய்லர் கோழி சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. பிராய்லர் கோழி சாப்பிட்டால் நோய்கள் வரும் என்பதற்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை’’ என்றார்.