தமிழகம்

கோ-ஆப் டெக்ஸ் வரலாற்றில் முதன் முறையாக ரூ. 301 கோடிக்கு ஜவுளி விற்று சாதனை: கோ-ஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் தகவல்

செய்திப்பிரிவு

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள குமரி கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி திருவிழாவை முன்னிட்டு புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சித் தலைவர் சஜ்ஜன்சிங் சவான் முன்னிலையில் கோ ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் வெங்கடேஷ் குத்து விளக்கேற்றி புதிய ரக கோலம்,சங்கீத் மென்பட்டு,மகா ராணி பட்டு ஆகிய பட்டு சேலைகளை அறிமுகப்படுத்தி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து 2013_14ம் ஆண்டில் 2000 ரூபாய்க்கு மேல் உடை வாங்கியவர்களுக்கு வழங்கிய கூப்பனில் சிறந்த பழமொழிகளை எழுதிய முதல் 3 நபர்களுக்கு தலா 8 கிராம் தங்கமும்,2 வதாக 2 நபர்களுக்கு 2 கிராம் தங்க நகையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோ ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் வெங்கடேஷ் கூறியதாவது:

கோ ஆப்டெக்ஸ் 78 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள நெசவாளர் களுக்கும்,வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான சேவையை அளித்து வருகின்றது.இந்தியாவில் உள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மையானதாக உள்ளது.நெசவாளர்கள்,வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பே இதற்கு காரணம். 2013_14ம் ஆண்டில் ரூ. 301.44 கோடி அளவிற்கு கோஆப்டெக்ஸ் சில்லறை விற்பனை செய்து,வரலாற்று சாதனை புரிந்துள்ளது.கோஆப் டெக்ஸின் 78 ஆண்டு வரலாற்றில் முதன் முதலாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மண்டலத்தில் 2013_14ம் ஆண்டில் ரூ. 30 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது.கடந்த ஆண்டு தீபாவளியின்போது திருநெல்வேலி மண்டலத்தில் 16 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது.

நடப்பு ஆண்டில் 24 கோடி விற்பனை குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குமரி கோ ஆப்டெக்ஸில் நடப்பு ஆண்டில் தீபாவளிக்கு ரூ.8கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

SCROLL FOR NEXT