சாலைகளை அகலப்படுத்தவும், மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள ரூ.2,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது:
2016-17-ம் ஆண்டில் ‘ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ் 1000 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகளை அகலப்படுத்தும் பணிகளும், 3,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை களை மேம்படுத்துவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்துக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.2,800 கோடி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது.
‘செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறையின்’ கீழ் பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் கோட்டங்களில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மாவட்டச் சாலைகளை வலுப் படுத்தவும், பராமரிக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டிலும் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக, ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.437 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2016-17-ம் ஆண்டில் சாலைகள் மற்றும் பாலங்கள் மேம்படுத்தும் பணிகளை ரூ.300 கோடி செலவில் நபார்டு வங்கியின் கடனுதவியுடன் தமிழக அரசு மேற்கொள்ளும்.
நடப்பு நிதியாண்டில் 12 சாலை மேம்பாலங்கள் மற்றும் சாலை சுரங்க பாலங்கள் ரூ.375.17 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட உள்ளன. போக்குவரத்து நெருக்கடி அதிகமாக உள்ள முக்கியமான இடங்களில் நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.320 கோடி செலவில் சேலம் மாநகரில் உள்ள 5 சாலைகள் சந்திப்பு, ரூ.111.40 கோடி செலவில் ஏ.வி.ஆர். ரவுண்டானா மற்றும் குரங்குச் சாவடி சந்திப்புகள், ரூ.26.77 கோடி செலவில் திருவாகவுண்டனூர் சந்திப்பு மற்றும் ரூ.121.82 கோடி செலவில் கோயம்புத்தூரில் உள்ள ஆத்துப்பாலம் மற்றும் உக்கடம் சந்திப்பு முதல் ஒப்பணக்காரத் தெரு வரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டப்பணிகள் மேலும் துரிதப் படுத்தப்படும்.
உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் ‘தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்’ இரண்டாவது கட்டத்தின் கீழ், 427 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் கடின விளிம்புகளுடன் கூடிய அகலப்படுத்தப்பட்ட இரு வழிச்சாலைகளாகவும், 146 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் நான்கு வழிச்சாலை களாகவும் தரம் உயர்த்தப்படுவதுடன், 597 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
‘விளைவு மற்றும் செயல்திறன் அடிப்படையிலான சாலை பராமரிப்பு ஒப்பந்த முறையின்’ கீழ் இரண்டு பணிகளும், பொறியியல், கொள்முதல், கட்டுமான ஒப்பந்த முறையில் 10 பணிகளுக்கும் ஒப்பந்தங்கள் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக 30 கி.மீ நீளமுள்ள மேட்டுப்பாளையம் – ஈரோடு நெடுஞ்சாலை, 70 கி.மீ நீளமுள்ள ஒட்டன்சத்திரம்-திருப்பூர் நெடுஞ்சாலை மற்றும் 46 கி.மீ. நீளமுள்ள திருநெல்வேலி-கொல்லம் நெடுஞ்சாலை ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் அரசு-தனியார் பங்களிப்பு முறையில் ரூ.1,541 கோடி செலவில் 4 வழி சாலைகளாகத் தரம் உயர்த்தப்படும். 2016-17 பட்ஜெட்டில் இத்திட்டங்களுக்காக ரூ.1,220.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சாலை விபத்து மேலாண்மை அமைப் பின் தகவல்களைப் பயன்படுத்தியும், சாலைகளில் காவல்துறையின் ரோந்து பணிகளை செம்மைப்படுத்தியும் விபத்துக்களைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விழிப்புணர்வு பிரச்சாரங்கள், தொழில்நுட்பச் சீரமைப்பு முயற்சிகள் போன்ற சாலை பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேலும் தீவிரப்படுத்தவுள்ளது. 2016-17-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சாலை பாதுகாப்பு நிதிக்காக மொத்தம் ரூ.165 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அதிகளவில் விபத்துக்கள் நடக்கும் இடங்களில் சாலை குறை பாடுகளை சரி செய்ய, ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சாலை பாதுகாப்புக்கென தனியாக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.