தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி ஜூன் 16-ம் தேதி பெண்களை திரட்டி சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
விருகம்பாக்கம் தொகுதி பாஜக சார்பில் பேட்டரியால் இயங்கும் வாகனம் மூலம் குப்பைகளை அள்ளி தூய்மைப்படுத்தும் பணி கே.கே.நகரில் நேற்று தொடங்கியது. இந்தப் பணியை தொடங்கி வைத்த பின் நிருபர்களிடம் தமிழிசை கூறியதாவது:
தூய்மையான நகரங்களின் பட்டியலில் சென்னை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. சென்னை மாநகரம் சுத்தமான நகரமாக மாறவேண்டும். எனவேதான் பரிசோதனை முயற்சியாக பேட்டரியில் இயங்கும் வாகனம் மூலம் குப்பை எடுத்துச் செல்லும் பணியை தொடங்கியுள்ளோம்.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான நிர்வாக ரீதியான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நாளை (இன்று) நடக்கிறது. அதில்தான் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பங்கேற்கிறார்.
குறிப்பிட்ட அமைச்சர்கள் மீது லஞ்சப் புகார் இருக்கிறது என்று வருமானவரித் துறை பட்டியல் அனுப்பிய பிறகும் புகாருக்கு ஆளான அமைச்சர்கள் காமராஜ், சரோஜா போன்றோரை தமிழக அரசு பாதுகாத்து வருகிறது. எனவே, தமிழகத்தில் ஊழலை எதிர்த்து கடுமையாக போராடுவோம். எந்த விதத்திலும் தமிழக அரசை மிரட்டுவதோ, தமிழக அரசோடு ஒருமித்துப்போவதோ பாஜகவின் கொள்கை இல்லை.
நீட் தேர்வை பொறுத்தவரை தமிழ் வழியில் கற்ற மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் அதிக இடங்கள் கிடைக்கும். நீட் தேர்வு தமிழக மக்களுக்கு நிச்சயம் பலனைத் தரும். தமிழகத்தில் மதுக்கடைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் ஜூன் 16-ம் தேதி பெண்களைத் திரட்டி கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.