ஓசூர் அருகே பெங்களூர்- எர்ணாகுளம் இடையே செல்லும் இன்டர்சிட்டி பயணிகள் ரயில் (ரயில் எண்: 12677) இன்று காலை 7.40 மணியளவில் தடம் புரண்டதில் 10 பேர் பலியாகினர்.
மேலும், 60 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெங்களூரில் இருந்து கோயம்புத்தூர் வழியாக எர்ணாகுளம் வரையில் செல்கின்ற இன்டர்சிட்டி விரைவு ரயில் ஓசூரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆனைக்கல் என்ற இடத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
பெங்களூரிலிருந்து வந்து கொண்டிருந்த அந்த ரயில் ஆனைக்கல் பகுதியினை கடக்கும் போது திடீரென்று டி-8, டி-9 மற்றும் எஞ்சின் உட்பட நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. இதில் இரண்டு பொதுப் பெட்டிகளும், 2 ஏசி பெட்டிகளும் அடக்கம்,
சம்பவ இடத்துக்கு தமிழகம் மற்றும் கர்நாடகா ரயில்வே அதிகாரிகள் விரைந்துள்ளனர். மேலும் இரு மாநிலங்களில் இருந்தும் 10 ஆம்புலன்ஸ் வாகனங்களும் மீட்புப் பணிக்கு விரைந்துள்ளன.
D-9 பெட்டிதான் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளது எனவும், பயணிகள் தடம் புரண்ட பெட்டிகளுக்குள் மாட்டிக் கொண்டுள்ளதால் அதிகளவில் உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
பிரதமர் இரங்கல்:
பெங்களூரு ரயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டரில், பெங்களூரு-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என விரும்புகிறேன். ரயில்வே அமைச்சரும், அதிகாரிகளும் விபத்து குறித்து கூர்ந்து கவனித்து வருகின்றனர். மீட்புப் பணிகள் சரியான முறையில் நடைபெறுவதை அவர்கள் உறுதி செய்வார்கள்" என தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஆய்வு:
சம்பவ இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு விரைந்துள்ளார். அவருடன் ரயில்வே வாரியத் தலைவரும் சென்றுள்ளார்.
முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தண்டவாளத்தில் உருண்டு விழுந்த பாறை மீது ரயில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், ரயில் விபத்து தொடர்பாக ரயில் பாதுகாப்பு ஆணையர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
2 லட்சம் இழப்பீடு:
அதேபோல், "விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும், சிறிய காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.20,000 உதவித் தொகையும் வழங்கப்படும்" எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஓசூர் அருகே ரயில் விபத்து குறித்து தகவல் அறிய:
பெங்களூரு: 080-22371165, 09731666751, சேலம்: 0427-2431947, ஈரோடு: 9600956237, 9600956234, திருப்பூர்: 9442168117, கோயமுத்தூர்: 9600956288, 9600956232 பாலக்காடு: 0491-2556198, 0491-2555231, திருச்சூர்: 0487-2424148, 2430060, ஆல்வே: 0484-2398200, எர்ணாகுளம் டவுன் பகுதி: 0484-2398200, எர்ணாகுளம் சந்திப்பு: 0484-2100317, 0813699773, 09539336040, திருவனந்தபுரம்: 0471-2321205, 2321237, 09746769960.