தமிழகம்

கடலூரில் தொழிற்சாலைகள் இருந்தும் தொழில் வளர்ச்சி இல்லை

செய்திப்பிரிவு

# தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் பெய்யும் மழை இந்தத் தொகுதியில் உள்ள தென்பெண்ணை, கெடிலம், வெள்ளாறு மூலம் கடலுக்குச் செல்கிறது. இதைத் தேக்கி வைக்கத் திட்டங்கள் எதுவும் இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீரையே நம்பி இருக்க வேண்டியுள்ளது.

கடலூரின் கடற்கரைப் பகுதியிலிருந்து கடல் நீர் கெடிலம், வெள்ளாறு வழியாக ஊருக்குள் வருகிறது. எனவே, ஆறுகளில் ஆங்காங்கே கதவணைகளும், தடுப்பணைகளும் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கை இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

# ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் கடல் வணிகத்துக்கு முக்கியத் தளமாக விளங்கியது கடலூர் துறைமுகம். ஆனால், இன்று அது பழுதடைந்து விட்டது. துறைமுகத்தை ஆழப்படுத்தி மீண்டும் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்தினால் சென்னையைப் போல் கடலூர் வளர்ச்சி பெறும். இதுகுறித்துப் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை எழுப்பியும் கொஞ்சமும் அசைந்துகொடுக்கவில்லை மத்திய அரசு.

# தொகுதிக்குள் 2006-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் இன்றுவரை தரம் உயர்த்தப்படவில்லை. விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ருட்டிக்கும் வடலூருக்கும் இடையே இருக்கும் கண்ணுத்தோப்புப் பாலம் 1909-ம் ஆண்டு கட்டப்பட்டது. பல ஆண்டுகளாகவே கைப்பிடிச் சுவர்கள் இல்லாமலும் குறுகியதாகவும் இருக்கும் இந்தப் பாலத்தில் இதுவரை 1,400 விபத்துகள் நடந்திருக்கின்றன.

ஆனாலும் பாலம் சீரமைக்கப்படவில்லை. தொகுதியின் பெரும்பாலான சாலைகள் குறுகியதாக இருப்பதால், விபத்துகள் அதிகரித்துவருகின்றன. மேம்பாலப் பணிகளும் ஐந்து ஆண்டுகளாக இழுபறியில் உள்ளன. புதுச்சேரி - கடலூர் - நாகை கடற்கரைச் சாலை மற்றும் கடலூர் நகரப் புறவழிச் சாலை திட்டங்கள் மத்திய அரசின் அறிவிப்புடன் நின்றுவிட்டன.

# சுற்றுச்சூழல் அபாய நிலையில் இருக்கிறது. சிப்காட் தொழிற்சாலைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த அளவைவிடப் பல மடங்கு ரசாயனம் காற்றில் கலக்கிறது. இதனால், ஆயிரக் கணக்கான மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக இதை எதிர்த்து ஈச்சங்காடு, காரைக்காடு மக்கள் போராடுகின்றனர்.

போபால் போன்று விபத்துகள் நடக்கவும் வாய்ப்பு இருப்பதாக சில அமைப்புகள் எச்சரிப்பதால், வரும் தேர்தலில் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

# ‘தானே’ புயலின் பாதிப்பிலிருந்து முழுமையாக மீளவில்லை முந்திரி மற்றும் பலா விவசாயிகள். இவர்களின் விவசாயம் சீரடைய இன்னும் சில ஆண்டுகளாவது ஆகும். அதுவரை மத்திய அரசின் நிவாரணத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள் விவசாயிகள்.

# ரயில்வே துறை தங்களைப் புறக்கணிப்பதாகக் குற்றம்சாட்டுகிறார்கள் தொகுதி மக்கள். புதுச்சேரி - கடலூர் - திருப்பதி மார்க்கமாக ரயில் பாதை அமைக்க வேண்டும். சென்னை - கடலூர் - மயிலாடுதுறை மார்க்கம் மற்றும் கடலூர் - சேலம் - திருச்சி மார்க்கத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் கிடப்பில் உள்ளன.

# என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டம் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீர்க்கப்படாத பிரச்சினை. அவர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் மத்திய அரசு இழுத்தடிக்கிறது. இதனால், அடிக்கடி நடக்கும் தொழிலாளர்களின் போராட்டங்களால் மின் உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது.

என்.எல்.சி. தொழிற்சாலை விரிவாக்கத்துக்காக வீடு, நிலம் கொடுத்தவர்கள் நியாயமான நிவாரணம் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள்.

# பாதாள சாக்கடைத் திட்டம் பல ஆண்டுகளாக இழுபறியில் இருக்கிறது. பச்சையாங்குப்பம் குப்பைக் கிடங்கால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுச் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

SCROLL FOR NEXT