“ஒரு பதவிக்கு நேர்காணல் நடத்தினால் அவர்களுக்குரிய மதிப்பெண்ணை பேனாவில் அழிக்க முடியாத மையினால் இட வேண்டும். ஆனால், இங்கே பென்சிலால் இடப்படுகிறது. அதுவே காலங்காலமாக ஊழலுக்கும் வழி வகுக்கிறது. இப்படி சுமார் 5,000 பேருக்கு நேர்காணல் நடத்தப்பட்டு ரூ.100 கோடி அளவுக்கு சுருட்ட திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது” என்று அதிர்ச்சிகர புகாரை நம்மிடம் கூறுகின்றனர் மின்வாரிய அலுவலர்கள்.
அவர்கள் மேலும் கூறியதாவது: “மின்வாரியம் 31.01.2013 கணக்கின்படி தொழில்நுட்ப உதவியாளர்களாக இயந்திரவியலில் 1137, மின்னியலில் 47 பணியிடங்கள் காலியாக உள்ளன. தவிர, 23,000 களப்பணியாளர்கள் பணி யிடங்களும், 409 உதவிப் பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர் பணியி டங்களும் காலியாக உள்ளன.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் மின்வாரியத் தலைவராக விஜய ராகவன் இருந்தபோது, மின்வாரியப் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்பப்பட்டன. சீனியாரிட்டிப்படி 1:5 என்ற அளவில் வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டன. அவர்கள் படிப்பில் பெற்ற மதிப்பெண்ணையே முழு மதிப்பாகக் கொண்டு பதவிகளில் அமர்த்தப்பட்டனர். இதனால் பதிவு மூப்பு அடிப்படையில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையிருந்தது.
பென்சிலும் ஊழலும்
ஆனால், பின்னாளில் இது மாற்றப்பட்டு கல்வியில் பெற்ற மதிப்பெண் 85 சதவீதமாகவும், மீதி 15 மதிப்பெண்ணை நேர்காணலுக்கும் அளித்தனர். ஆரம்பகாலத்தில் இந்த நேர்காணல் மதிப்பெண்ணை நேர்மையாக பேனா மையினால் இடுவதே வழக்கம். பின்னாளில்தான் இந்த மதிப்பெண்ணை பென்சிலால் இடும் முறை பின்பற்றப்பட்டது. இதன்மூலம் யார் அதிக தொகை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு 15-க்கு 14 மதிப்பெண் போட ஆரம்பித்தனர்.
இதனால் படித்து நல்ல மதிப்பெண் பெற்ற நபர் பணம் கொடுக்காததால், நேர்காணலில் மதிப்பெண் பெற முடியாமல் போனது. முன்பு நடந்த நேர்முகத் தேர்வுகளில் போடப்பட்ட மதிப்பெண் விவரங்களை சமீபத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்டுப்பெற்றபோது அதில் பணியிடங்களில் தேர்வு பெற்ற வர்கள் எல்லோருமே நேர்காணல் மதிப்பெண் 15-க்கு 14 பெற்றவர்களாக இருந்தனர். பணியிடம் கிடைக்காதவர்கள் அனைவரும் 15-க்கு 1 மதிப்பெண் பெற்றவர்களாக இருந்தனர். பென்சில் மதிப்பெண் நாடகம்தான் இதற்குக் காரணம்.
14 மதிப்பெண் பேரம்
கடந்த 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 50 பொறியியல் பதவிகளுக்கு 250 பேரையும், 9-லிருந்து 13-ம் தேதி வரை 950 இதரப் பதவிகளுக்கு 4,750 பேருக்கும் 14 மையங்களில் நேர்காணல் நடந்தது. அதில் வந்தவர்கள் எல்லோருக்குமே நேர்காணல் மதிப்பெண் பென்சிலிலேயே இடப்பட்டிருக்கிறது. இதற்கேற்ப 14 மதிப்பெண் போட பேரமும் நடக்கத் தொடங்கிவிட்டது. இதற்கு இப்போதைய மார்க்கெட் ரேட் ஒரு பணியிடத்துக்கு ரூ.14 லட்சம் வரை உள்ளது.
இந்த நேர்காணலுக்கு வரமுடியாமல் விடுபட்டவர்கள் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள அப்ரண்டீஸ் ஸ்டாப்புகளுக்கு வரும் 23-ம் தேதி நேர்காணல் நடக்க உள்ளது. அது முடிந்ததும் அடுத்த நாளே நேர்காணல் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டு யார் யாருக்குப் பணியிடங்கள் என்பது முடிவாகி பட்டியலும் வெளியாகிவிடும்.
பாவம் ஏழை பட்டதாரிகள்
இப்பதவிகளுக்கு 2009-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் நேர்காணல் நடந்துள்ளது. அப்படியிருக்க, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் ஏழை பட்டதாரிகளின் நிலையை சொல்லவேண்டியதில்லை.
நேர்மையான அதிகாரி தேவை
நேர்மையான காவல்துறை அதிகாரி நடராஜை மாநில தேர்வாணையத்தின் தலைவராக்கி சீர்திருத்தங்கள் பல செய்தார் முதல்வர். அதனால் பல ஏழை எளிய மாணவர்கள் அரசுப் பணியிடங்களில் நியமனம் பெற்றனர். அதே சீர்திருத்தத்தை மின்வாரியத்திலும் கடைப்பிடிக்க முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த பென்சில் மதிப்பெண் ஒழிந்தாலே இதில் புழங்கும் ஊழலும் ஒழிந்துவிடும்’ என்றனர்.