தமிழகம்

அண்ணா 106-வது பிறந்தநாள் விழா போட்டிகள்: மாணவர்களுக்கு ஸ்டாலின் பரிசு

செய்திப்பிரிவு

தமிழ்ச் சமுதாயத்துக்கு திறமை மிக்க இளம் தலைமுறையினர் கிடைத்துவிட்டனர் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக இளைஞர் அணி அறக்கட் டளை சார்பில், அண்ணாவின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு மாநில அளவிலான பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை ஒப்பித்தல் போட்டி நடத்தப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்த போட்டிகளில் முதல் 2 இடங்களைப் பிடித்தவர்களுக்கான இறுதிப் போட்டி, திருவள்ளூர் மாவட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

போட்டியில் வென்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.15 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. பரிசுத் தொகை, சான்றிதழை வழங்கி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த 7 ஆண்டுகளாக இந்தப் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அண்ணா பிறந்தநாளையொட்டி இதுவரை 9,945 மாணவ, மாணவியருக்கு 2 கோடியே 19 லட்சத்து 82 ஆயிரத்து 500 ரூபாயை பரிசாக திமுக இளைஞர் அணி அறக்கட்டளை வழங்கியுள்ளது.

கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 12-ம் வகுப்புகளில் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி, கடந்த 6 ஆண்டுகளில் 3,797 மாணவ, மாணவியருக்கு 2 கோடியே 54 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

பேச்சுப் போட்டியில் பங்கேற்று பேசிய மாணவ, மாணவியரின் உரைகளைக் கேட்டபோது, எதிர்காலத்தில் தமிழ்ச் சமுதாயத்துக்கு திறமை மிக்க, நல்ல இளம் தலைமுறையினர் கிடைத்துவிட்டனர் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.யாகேஸ்வரி கொடுத்துள்ள கடிதத்தில், தங்கள் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி, வண்ணம் பூசி, அதில் ஓவியங்கள் வரைந்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். சென்னையைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர், தானும் தமிழ் ஆசிரியர் புலவர் அந்தோணிசாமியும் இணைந்து கடந்த 3 ஆண்டுகளாக திருக்குறள் நெறிகளை பரப்பி வருவதாகவும் அதற்கு 2 ஆயிரம் திருக்குறள் புத்தகங்கள் மற்றும் புதிய மெகாபோன் தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கைகள் திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் நிறைவேற்றித் தரப்படும் என்ற உறுதியை அளிக்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

SCROLL FOR NEXT