தமிழகத்திலுள்ள பெட்ரோல் நிலையங்களில் வரும் ஜனவரி 13-ம் தேதி வரை கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வது தொடரும் என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை மாலை, "பெட்ரோல் நிலையங்களில் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனைக்கு 1 சதவீதம் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும் என வங்கிகள் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. மேலும், எங்களின் லாப வரம்பை எண்ணெய் நிறுவனங்கள்தான் நிர்ணயம் செய்கின்றன. ஏற்கெனவே, அந்த வரம்பை உயர்த்துமாறு நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். இந்நிலையில், எங்களுக்கு கிடைக்கும் லாபத்திலும் பரிவர்த்தனைக் கட்டணத்தை பிடித்தம் செய்துவிட்டால் தொழிலை நடத்த முடியாது. எனவே வங்கிகளின் இந்த அறிவிப்பைக் கண்டித்து ஞாயிறு நள்ளிரவு முதல் பெட்ரோல் நிலையங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை ஏற்றுக்கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளோம்" என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்தன.
இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, "பெட்ரோல் நிலையங்களில் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனைக்கு 1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் முடிவை ஜவவரி 13-ம் தேதி வரை தள்ளிவைப்பதாக வங்கிகள் தங்களுக்கு தகவல் அனுப்பியுள்ளதால் தமிழகத்திலுள்ள பெட்ரோல் நிலையங்களில் வரும் ஜனவரி 13-ம் தேதி வரை கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வது தொடரும்" என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு அறிவிப்பும் வங்கிகளின் திடீர் உத்தரவும்:
பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், கிரெடிட், டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பெட்ரோல், டீசல் வாங்குவோருக்கு 0.75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், பெட்ரோல் நிலையங்களில் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனைக்கு 1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என வங்கிகள் திடீர் அறிவிப்பை வெளியிட்டன. இதற்கு பெட்ரோல் விற்பனையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு அறிவித்திருந்த 50 நாள் கெடு முடிந்த நிலையில் வங்கிகள் வெளியிட்ட திடீர் அறிவிப்பே தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் போராட்டத்துக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.