உடுமலை சங்கர் கொலை வழக்கில் வாதிட தனியாக வழக்கறிஞர் வைத்துக்கொள்ள அவரது மனைவி கவுசல்யா கேட்டுக்கொண்டுள்ளார்.
உடுமலை அருகே குமரலிங்கத் தைச் சேர்ந்த பொறியியல் கல் லூரி மாணவர் சங்கர், கலப்புத் திருமணம் செய்ததால், கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். படுகாயம் அடைந்த அவரது மனைவி கவுசல்யா, தீவிர சிகிச்சைக்குப் பிறகு சங்கரின் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக தனிப் படை போலீஸார் 11 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது 1,100 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத் திரிகை நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதாக மாஜிஸ்திரேட் அறிவித்தார். வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டன. வரும் 8-ம் தேதி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கவுசல்யா மற்றும் சமூக ஆர்வலர் எவிடன்ஸ் கதிர் ஆகியோர் திருப்பூர் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் நேற்று ஒரு மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து எவிடன்ஸ் கதிர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய விதிகளின்படி வன் கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர், தேவைப்பட்டால் கூடுதல் வழக்கறிஞரை நியமிக்க வழி வகை உள்ளது. அதன்படி, இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பி விடாமல் இருக்க கவுசல்யாவின் தரப்பில் இருந்து கோவையில் உள்ள மூத்த குற்றவியல் வழக்கறிஞர் பாப்பா மோகனை நியமிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இழப்பீட்டுத் தொகை
மேலும், தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் திருத்திய விதி களின்படி பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.7.5 லட்சத்தில் இருந்து ரூ.8.25 லட்சமாக மாற்றப்பட் டுள்ளது. எனவே, கவுசல்யா மற்றும் சங்கரின் தந்தை வேலுச்சாமி பெயரில் ஏற்கெனவே வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை, புதிய மாறுதல் அடிப்படையில் கூடுதல் உதவித் தொகையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனுவில், கவுசல்யாவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.