சட்டசபைக்கு வரவேண்டிய நேரத்தில் விஜயகாந்த் வருவார் என தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரோசய்யா வியாழக்கிழமை உரையாற்றினார். கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களிடம் வி.சி.சந்திரகுமார் கூறியதாவது:
முதல்வரை பாராட்டுகின்ற உரையாகவே, ஆளுநர் உரை உள்ளது. மக்களுக்கான நலத்திட்டம், மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை. ஜனநாயக முறைப்படி கூட்டத்தொடர் நடந்தால், நாங்களும் ஜனநாயக முறைப்படி நடப்போம். தேமுதிக தலைவர் விஜயகாந்த், கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வேண்டிய நேரத்தில் கலந்து கொள்வார். ஒட்டுமொத்தமாக ஆளுநர் உரை கவரிங் நகைக்கு, தங்க முலாம் பூசியது போல உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சமக தலைவர் சரத்குமார் கூறுகையில், ‘‘முதல்வரின் சிறந்த நிர்வாகத் திறமையால், தமிழகம் கல்வி மற்றும் சுகாதாரத்தில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. ஆளுநர் உரையில் தொலைநோக்கு திட்டங்கள் உள்ளன. ஆளுநர் உரையை படிக்காமலயே புறக்கணிப்பது முறையல்ல. மக்களுக்காக நடக்கும் சட்டமன்றத்தில், மக்களுக்காக பணியாற்ற வேண்டும்’’ என்றார்.
பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் கூறுகையில், “கரும்பு, நெல்லுக்கு நியாயமான விலை நிர்ணயிக்கக் கோரியும், விவசாயிகளின் நலனுக்காகவும் பேரவை கூட்டத்தொடரில் குரல் எழுப்புவோம்” என்றனர்.