தமிழகம்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மரங்களை வெட்ட தடை: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மரங்களை வெட்ட தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு நேற்று உத்தரவிட் டுள்ளது.

திருவண்ணாமலையில் மாதந் தோறும் பவுர்ணமி நாளில் ஏராளமானோர் கிரிவலம் செல் கின்றனர். அவர்களது வசதிக்காக ரூ.65 கோடி செலவில் கிரிவலப் பாதை விரிவாக்கம் செய்யப் படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். அதன்படி, கிரிவலப் பாதையில் 17 கி.மீ. தொலைவுக்கு சுமார் 7 முதல் 10 மீட்டர் வரை சாலையை அகலப்படுத்தும் பணியை நெடுஞ் சாலைத் துறை மேற்கொண்டு வருகிறது.

சாலை விரிவாக்கத்துக்காக, அங்குள்ள மரங்கள் வெட்டப் படுகின்றன. இதைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள், வெளிநாட்டு பக்தர்கள் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தி, மரம் வெட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பான செய்தி ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளி யானது. இதையடுத்து, சென்னை யில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு தாமாக முன்வந்து இதை வழக்காக எடுத்துக்கொண்டது. அமர்வின் நீதித்துறை உறுப்பினர் பி.ஜோதிமணி, தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் நேற்று விசாரணை நடத்தினர்.

‘‘கிரிவலப் பாதையில் மரங் களை வெட்டவும், சாய்க்கவும் இடைக்காலத் தடை விதிக்கப் படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித் துறை, மாசு கட்டுப்பாடு வாரியம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மரங்கள் வெட்டப்பட்டது சம்பந்தமாக தற்போதைய நிலை குறித்த அறிக்கையை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்ட அமர்வு உறுப்பினர்கள், விசாரணையை 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT