கல்வி நிறுவனங்கள் அனைத்தை யும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், கல்வியாளருமான வே.வசந்திதேவி வலியுறுத்தி யுள்ளார்.
கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பில் ‘அரசுப் பள்ளிகளைப் பலப்படுத்துவோம்’ என்ற முழக் கத்தை முன்வைத்து திருச்சி அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
அரசுப் பள்ளிகளை பலப்படுத்த, மேம்படுத்த ஓர் இயக்கம் அல்லது போராட்டம் நடத்தப்படுவது என்பது அரசுக்கு வெட்கக்கேடானது. கல்வி உரிமைச் சட்டத்தின் அனைத்து அம்சங்களையும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முழுமையாக நிறைவேற்ற அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போது, அரசுப் பள்ளிகள் மேம்பாடு அடைவதுடன், புற்றீசல் போல முளைத்திருக்கும் தனியார் பள்ளிகள் மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்.
நாட்டின் மொத்த வருவாயில் குறைந்தபட்சம் 6 சதவீதத்தை கல்விக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று 1960-லேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்த - தீவிரமாக வளரும் நாடுகளில் கல்விக்கு 10 சதவீதத்துக்கு மேலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், இந்தியாவில் 3.7 சத வீதத்துக்கு மேல் ஒதுக்குவதில்லை. கல்விக்கு ஒதுக்க போதிய நிதி இல்லை என்று அரசு கூறுவது வெட்கக்கேடானது. அரசு தனது பொறுப்பில் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் ஏற்று இலவசமாக கல்வி அளிக்க வேண்டும்.
நமது சமுதாயத்துக்கும், இளம் தலைமுறைக்கும் ஆங்கிலவழிக் கல்வி பெரும் சாபக்கேடாக உள்ளது. இதனால், ஒன்றும் புரியாமலேயே, கேள்வி கேட்கவும் தெரியாமல் கிளிப்பிள்ளைபோல் மனப்பாடம் செய்வதுதான் கல்வி என்றாகிவிட்டது. இதனால், தொடக்கப் பள்ளி முதல் கல்லூரி வரை ஆங்கிலவழியில் படித்துவிட்டு வருபவர்களால்கூட ஆங்கிலத்தில் பேச முடிவதில்லை. எனவே, தாய்மொழியில் கல்வி அளிக்க வேண்டும்.
அலகாபாத் உயர் நீதிமன்றம் 2015-ல் வலியுறுத்தியபடி, அரசு ஊதியம், சலுகைகள் பெறும் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்தால்தான் அரசுப் பள்ளிகள் மிகப் பெரிய முன்னேற்றம் அடையும் என்றார்.
முன்னதாக, வசந்திதேவி செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிளஸ் 2 தேர்வில் ரேங்க் முறை ஒழிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு கொண்டுவர வேண்டும்” என்றார்.
இந்தக் கருத்தரங்குக்கு கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி தலைமை வகித்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் ந.மணிமேகலை உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் வா.கோபிநாதன் வரவேற்றார். கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.மல்லிகா நன்றி கூறினார்.