பலத்த காற்று எச்சரிக்கையைத் தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு இடையே உருவாகி உள்ள புயல் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கைக் கூண்டு நேற்று ஏற்றப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: 1-ம் எண் எச்சரிக்கைக் கூண்டு என்பது சாதாரண தகவல்தான். இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு போகக்கூடாது என எச்சரிக்கை எதுவும் கிடையாது. மீனவர்கள் கடலுக்கு செல்லலாம். ஆனால் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கவே இந்தக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.