தமிழகம்

சிதம்பரம் கோயில் விவகாரம்: அரசுக்கு கருணாநிதி கேள்வி

செய்திப்பிரிவு

சிதம்பரம் நடராஜர் கோயில் பிரச்சினையில், எம்ஜிஆர் எடுத்த முடிவுக்கு எதிராக அதிமுக அரசு செல்படுவது நியாயம்தானா என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சிதம்பரம் நடராஜர் கோயில் பிரச்சினை நீண்ட நெடுங்காலமாக பேசப்பட்டு கடைசியாக 2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதை எதிர்த்து, தீட்சிதர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதிலே வெற்றி பெற முடியவில்லை என்பதால் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து கொண்டிருக்கின்றனர். அந்த வழக்கு கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து உச்ச நீதிமன்றத்திலே நடந்து கொண்டிருக்கிறது.

இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சுப்பிரமணிய பிரசாத்தும், தீட்சிதர்கள் சார்பில் சுப்பிரமணியசாமியும் வாதாடியுள்ளனர். தமிழக அரசின் சார்பில் ஆஜரான சுப்பிரமணிய பிரசாத் மூத்த வழக்கறிஞர் அல்ல. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தமிழக அரசு தாக்கல் செய்த சொத்துக்குவிப்பு வழக்கில் வாதிடுவதற்காக மூத்த வழக்கறிஞரை தமிழக அரசு நியமித்திருகிறதாம்.

தனிப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கில் இந்த அளவுக்கு அக்கறை காட்டும் அதிமுக அரசு, பொதுப் பிரச்சினையான சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கில் மட்டும் ஏனோதானோ என்று தீட்சிதர்களுக்கு ஆதரவாக, எம்ஜிஆர் எடுத்த முடிவுக்கு எதிராக செயல்படுவது நியாயம்தானா? தமிழக அரசு மூத்த வழக்கறிஞரை வைத்து உரிய முறையில் வாதாடாவிட்டால் தீட்சிதர்கள் பக்கம் ஒருதலை சார்பாக தீர்ப்பு சொல்ல வேண்டி வரும் என்று நீதிபதிகளே எச்சரித்திருப்பதாகவும் செய்தி வந்துள்ளது.

டிசம்பர் 3-ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழக்கறிஞர் 15 நிமிடங்கள் மட்டுமே சம்பிரதாயத்துக்காக வாதாடினார் என்றும் செய்தி வந்துள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில், நான் முதல்வராக இருந்தபோது பிறப்பிக்கப்பட்ட ஆணை என்பதால், தற்போதைய தமிழக அரசு அக்கறை இல்லாமல் இருந்து விடக் கூடாது. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோதே 1987-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுதான் இது. இடையிலே தீட்சிதர்கள் இடைக்காலத் தடை பெற்ற காரணத்தால் நடைமுறைக்கு வராமல் இருந்து 2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது. அதற்கு தீட்சிதர்கள் இடையூறு விளைவிக்க எண்ணுகிறார்கள். அதற்கு இன்றைய தமிழக அரசு துணை போய் விடக் கூடாது என்பதுதான் நம்முடைய விருப்பம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT