வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை பரோலில் விடுவிக்க இயலாது என்று சிறைத் துறையினர் கூறியுள்ளனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி தற்போது வேலூரில் உள்ள பெண்கள் சிறப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தனது வழக்கறிஞர் பி.புகழேந்தி மூலம் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் 90 வயதான எனது தந்தை சங்கர நாராயணன் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வசித்து வருகிறார். அவரை சந்தித்து 8 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.எனது தந்தையின் கடைசி காலத்தில் சில தினங்களாவது அவரின் அருகில் இருந்து அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஆகவே, ஒரு மாத காலம் சாதாரண விடுப்பில் என்னை சிறையிலிருந்து விடுவிக்குமாறு சிறைத் துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் நளினி கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோரைக் கொண்ட அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக வேலூர் மத்தியச் சிறை கண்காணிப்பாளர் பதில் மனுத் தாக்கல் செய்தார்.
சங்கரநாராயணன் உடல் நலத்துடன் உள்ளார். ஆகவே, தனது தந்தையின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று நளினி கூறுவது உண்மையல்ல.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நளினியை பரோலில் விடுவித்தால், அரசியல் கட்சியினர் அவரைச் சந்தித்து, தங்களுக்கு அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பார்கள். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், நளினிக்கு விடுமுறை அளிக்க காவல் துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி சம்பந்தப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை பரோலில் விடுவித்தால், சில அரசியல் கட்சியினரால் நளினி தாக்கப்படலாம். இதுபோன்ற பல காரணங்களால் நளினியை பரோலில் விடுவிக்க இயலாது என்று அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.