சென்னை மெட்ரோ ரயிலின் முதல் ரயில் பெட்டித் தொடரின் சோதனை ஓட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா இன்று (புதன்கிழமை) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சென்னை - கோயம்பேடு பணிமனையில் இந்தச் சோதனை ஓட்டம் தொடங்குவதற்கு முன்னர், 4 பெட்டிகள் கொண்ட முதலாவது மெட்ரோ ரயிலில் ஏறி, அதன் வசதிகளை முதல்வர் ஜெயலலிதா பார்வையிட்டார். அப்போது, அவரிடம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் கே.ராஜாராம் விவரித்தார்.
மெட்ரோ ரயிலில் குளிர்ச்சாதன வசதி, தானியங்கி ரயில் பாதுகாப்பு, தானியங்கி ரயில் இயக்கம், சிறப்பு இருக்கை வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், பயணிகளுக்கு நிறுத்தம் குறித்த தகவல், அவசரகால வெளியேறும் வசதி, பயணிகளின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் ஆகியவற்றை, மெட்ரோ ரயில் தொடரின் பெட்டிக்குள் சென்று முதல்வர் ஜெயலலிதா பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து கோயம்பேடு பணிமனையில் மெட்ரோ ரயிலுக்கான 25 கிலோ வாட் உயர் அழுத்த மின்சாரம் வழங்குவதற்கான பொத்தானை அழுத்தி அவர் துவக்கி வைத்தார்.
இந்தச் சோதனை ஓட்டம் தொடங்கி, ரயில் மீண்டும் அதே இடத்துக்குத் திரும்பும் வரை, முதல்வர் ஜெயலலிதா காத்திருந்தார். அவருடன் அமைச்சர்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.
சென்னை மெட்ரோ ரயில்
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. இரு வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப் பாதையும், பறக்கும் பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 9 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப் பாதையும், 16 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் பாதையும் (இருபுறமும்) அமைக்கப்பட்டு, தண்டவாளம் பதிக்கப்பட்டுவிட்டது.
முதல்கட்டமாக அடுத்த ஆண்டு ஜூன் மாதம் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே பறக்கும் பாதையில் மெட்ரோ ரயிலை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்ட 4 பெட்டிகள் கொண்ட முதலாவது மெட்ரோ ரயில், கடந்த ஜூன் மாதம் கப்பல் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.
கோயம்பேட்டில் 115 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் பணிமனையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்துக்காக 800 மீட்டர் நீளத்தில் பிரத்யேக டெஸ்ட் டிராக் அமைக்கப்பட்டுள்ளது. யாரும் குறுக்கே நுழையாமல் இருப்பதற்காக இருபுறமும் வேலியும் போடப்பட்டுள்ளது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு, பணிமனையில் இருந்து பேட்டரியில் இயங்கும் இயந்திரம் மூலம் டெஸ்ட் டிராக்குக்கு மெட்ரோ ரயில் இழுத்து வரப்பட்ட து. அங்கு ரயிலின் மின் சப்ளை, விளக்குகள், ஏ.சி. வசதி, பிரேக், இன்ஜின் செயல்திறன் உள்பட 12 விதமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. டெஸ்ட் டிராக்கில் சிறிது தூரம் ரயில் இயக்கிப் பார்க்கப்பட்டது.
இந்நிலையில், கோயம்பேடு பணிமனையில் இன்று மதியம் 2 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைத்தார். 100 மீட்டர் தூரம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.
இதையடுத்து, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் டிசம்பர் 15-ம் தேதி வரை நடக்கும். பின்னர் கோயம்பேடு - வடபழனி இடையே பறக்கும் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து ஆலந்தூர் வரை படிப்படியாக சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்படும்.
அடுத்த ஆண்டு மே மாதம், தெற்கு ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் முன்னிலையில் மெட்ரோ ரயில் வெள்ளோட்டம் விடப்படும். ஜூன் மாதத்தில் இருந்து கோயம்பேடு ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று உயர் அதிகாரி கூறினார்.