மக்களின் உடல்நலன் பாதிக்கப்படுவதால்தான் மேகி நூடுல்ஸ்க்கு தடை என சொல்லும் தமிழக அரசு, டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபான தீங்குகளை உணர்ந்து மதுக்கடைகளை மூடுவதற்கு முன்வருமா என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "உணவுப் பொருட்களில் கலப்படமோ, உயிர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய வேதிப்பொருட்களோ இருக்ககூடாது, அதை உரிய முறையில் பரிசோதித்து பொதுமக்களுக்கு அளிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசாங்கத்திற்கு உள்ளது.
உ.பி மாநில அரசிலுள்ள ஒரு நேர்மையான அதிகாரி எடுத்த நடவடிக்கையின் தொடர்ச்சியாகதான் நாடு முழுவதும் நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் தடைசெய்யப்பட்டுள்ளது.
தடை செய்ய முக்கிய காரணமாக கூறப்பட்ட அஜினமோட்டோவை (Monosodium Glutamate), தமிழகத்தில் உற்பத்தி செய்ய ஜப்பான் நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிகிறது.
மேகி நூடுல்சை தடை செய்த தமிழக அரசு அஜினமோட்டோ உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கலாமா? அதை மறு பரிசீலனை செய்யவேண்டும்.
மக்களின் உடல்நலன் பாதிக்கப்படுவதால்தான் மேகி நூடுல்ஸ்க்கு தடை என சொல்லும் தமிழக அரசு, டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானத்தால் கணவனை இழந்த பெண்கள், தந்தையை இழந்த குழந்தைகள், மகனை இழந்த பெற்றோர்கள் என லட்சக்கணக்கானோர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் மதுவால் சாலை விபத்துகளும், இறப்புகளும் நடைபெறுவதாகவும், தமிழகத்தில் நடைபெறும் பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு மதுபானமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று பல்வேறு ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
எனவே மேகி நூடுல்ஸ்சுக்கு தடை விதித்ததுபோல, தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்வருவாரா?
விவசாயிகள் துயர் துடைப்பாரா?
இந்த ஆண்டு டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாது என்று அறிவித்துவிட்டு, மண்வளத்தை பாதுகாக்க ஏக்கர் ஒன்றிற்கு ரூபாய் 315 வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது, விவசாயிகள் கேட்பதோ குறுவைக்கு உயிர் தண்ணீர்.
ஆனால் தமிழக முதலமைச்சரோ பணம் கொடுத்தால் போதும் எல்லாவற்றையும் விவசாயிகள் மறந்துவிடுவார்கள் என்ற மனநிலையில் இருப்பதாகவே தெரிகிறது.
ஆர்.கே.நகரிலே வீட்டுக்கு ஐந்தாயிரம், ஓட்டுக்கு இரண்டாயிரம் என்ற பார்முலா அமல்படுத்தப்பட்டுள்ளது என அத்தொகுதி மக்கள் பேசுகிறார்கள்.
ஆனால் குறுவைக்கு உயிர் பிச்சை கேட்கும் விவசாயிகளுக்கோ "யானைப் பசிக்கு சோளப்பொறியாக" ஏக்கருக்கு 315 ரூபாய் கொடுப்பது நியாயமா? பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வறட்சி நிவாரண நிதியாக வழங்கவேண்டுமென தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
தினந்தோறும் காணொளி காட்சி மூலம் செய்யப்படும் திட்டங்களும், திறப்பு விழாக்களும் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்காகவே, சுமார் பத்துமாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது புதியனபோல் செயல்படுத்தப்படுகிறது. சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் 400 கோடி செலவில் தடுப்பணை கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டு இதுவரையிலும் நிறைவேற்றப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இப்படி மக்களை ஏமாற்றும் இவரை பார்க்கும்போது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் "இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடல் வரிகள்தான் எனக்கு நினைவிற்கு வருகிறது"
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.