இன்றைய இளைஞர்கள், எழுத்துத் துறைக்கு தைரியமாக வர வேண்டும் என்று ‘தி இந்து’ குழும இணைத் தலைவர் என்.முரளி தெரிவித்துள்ளார்.
அடையாறு ஒடிசி வணிக நிறுவனம் சார்பில் சென்னை தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பொறியியல் மாணவர் ஏ.சாய் பிரபஞ்ச் எழுதிய ‘கான்ட்ராக்டர்’ என்ற ஆங்கில புதினம் வெளியீட்டு விழா, ஒடிசி நிறுவன வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் ‘தி இந்து’ குழும இணைத் தலைவர் என்.முரளி பங்கேற்று நாவலை வெளியிட, இசை வரலாற்று ஆய்வாளர் வி.ஸ்ரீராம் பெற்றுக்கொண்டார்.
பின்னர் என்.முரளி பேசும்போது, இந்த புதினம் கற்பனைக் கலந்து எழுதப்பட்ட புதின வகையைச் சார்ந்தது. எங்கள் காலத்தை விட, இக்கால இளைஞர்களுக்கு, இது போன்ற கற்பனைக் கலந்த நாவல்கள் பொருத்தமாக இருக்கும். பெரிதும் விரும்புவார்கள். இளம் வயதில் இவர் 2-வது புதினத்தை எழுதியுள்ளார். இவர் மேலும் பல புதினங்கள் எழுத வாழ்த்துகிறேன். இதுபோன்று இன்றைய இளைஞர்கள், எழுத்துத் துறைக்கு தைரியமாக வர வேண்டும். கற்பனைகளை அனுபவித்து, தங்கள் படைப்புகளை வழங்க வேண்டும் என்றார்.
இசை வரலாற்று ஆய்வாளர் வி.ஸ்ரீராம் கூறும்போது, நான் எனது நிறுவனத்தைப் பார்த்துக் கொண்டே ஆய்வில் ஈடுபட்டதை எனது பெற்றோர் எதிர்த்தனர். தொழில் பாதிக்கும் என்றனர். அன்று எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த யாரும் இல்லை. இன்றைய இளைஞர்களை ஊக்கப்படுத்த பலர் உள்ளனர். இந்த இளைஞர் படித்துக் கொண்டிருக்கும்போதே, புதினம் எழுத அவரது பெற்றோர் அனுமதிக்கின்றனர். இன்றைய உலகம் பல்வேறு மாற்றம் கண்டுள்ளது. எழுத்தாற்றல் உள்ள இளைஞர்களுக்கு இந்த உலகம் சாதகமாகவே உள்ளது என்றார்.
புதினத்தின் ஆசிரியர் சாய் பிரபஞ்ச் பேசும்போது, நான் பிறக்கும்போது எழுதுகோலுடன் பிறக்கவில்லை. பள்ளி காலத்தில் எனது எழுத்தில் பிழைகள் இருக்கும். தொடர் முயற்சியின் காரணமாக இரு புதினங்களை எழுதியிருக்கிறேன். இது எல்லோராலும் முடியும். இன்று வெளியிட்ட புதினத்தில், மாயாஜால சக்தியால், ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பு, அதிலிருந்து அவர் எப்படி விடுபடுகிறார், அதற்கு நண்பர்கள் செய்யும் உதவிகள் போன்றவை இடம்பெற்றுள்ளன என்றார்.
நடிகர் காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.