ரயில்வே போலீஸார் விசாரித்து வந்த சுவாதி கொலை வழக்கை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு மாற்றி டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பெண் பொறியாளர் சுவாதி, கடந்த 24-ம் தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள இடங்களில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் நபரின் உருவம் பதிவாகியுள்ளது.
அப்பகுதியில் இருந்த 3 கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகள், கொலையாளி பயன்படுத்திய அரிவாள் ஆகிய 2 விஷயங்கள் மட்டுமே சுவாதி கொலை வழக்கில் போலீஸாருக்கு கிடைத்த ஆதாரங்கள். இதை வைத்தே விசாரணை நடத்தப்பட்டு வந்தன.
ரயில்வே போலீஸார் விசாரித்து வந்த இந்த கொலை வழக்கை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி கே.அசோக்குமார் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, நுங்கம்பாக்கம் துணை ஆணையர் தேவராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களும் 2 மணி நேரத்தில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார், கொலை நடந்த இடத்தை நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சுவாதியின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர். மேலும், சுவாதியின் நண்பர்கள், அவருடன் பணியாற்றிய ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
மாற்றத்துக்கு காரணம் என்ன?
ஒரு கொலை வழக்கை விசாரிப்பதற்கும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும் தேவையான அடிப்படை வசதிகள் எதுவுமே ரயில்வே போலீஸாரிடம் கிடையாது. இது குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் சைபர் கிரைம், சிறப்புப் புலனாய்வு அமைப்பு, ரவுடிகள் பட்டியல் என பல வசதிகள் உள்ள தமிழக காவல் துறைக்கு இந்த வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முகநூல் நண்பர்களிடம்..
சுவாதியின் முகநூல் கணக்கை ஆய்வு செய்த போலீஸார், அவரிடம் தொடர்ந்து ‘சாட்’ செய்த 2 பேரை கண்டுபிடித்துள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்துள்ளனர். இதில் ஒரு நபர், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள நபரைப் போலவே இருக்கிறார். அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளதால் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, சுவாதியின் முகநூல் பக்கத்தில் இருந்து அவரது புகைப்படங்கள் மற்றும் தகவல்களை சிலர் எடுத்து பத்திரிகைகளில் பிரசுரம் செய்தனர். இதனால், அவரது முகநூல் பக்கத்தை போலீஸார் முடக்கி உள்ளனர்.
போலீஸ் அதிகாரிகள்
திருச்சி ரயில்வே காவல் பிரிவு கண்காணிப்பாளர் ஆனிவிஜயா, சுவாதியின் வீட்டுக்கு நேற்று காலை நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்நிலையில் வழக்கு மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து மாலையில் காவல் கூடுதல் ஆணையர் சங்கர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் நுங்கம்பாக்கம் போலீஸாரும் விசாரணை மேற்கொண்டனர்