தமிழகம்

ஹென்றி திபேன் மீதான பொய் வழக்கைக் கண்டித்து செப் 1-ல் மதிமுக ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

ஹென்றி திபேன் மீதான பொய் வழக்கை காவல்துறை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி செப்டம்பர் 1-ல் மதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் மட்டும் அன்றி, இந்தியா முழுமையும் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, மனித உரிமைகள் போராளியாக, மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர், வழக்கறிஞர் ஹென்றி திபேன், கட்சி, சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, மகத்தான தொண்டு ஆற்றி வருகின்றார்.

கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள 22 மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் பல லட்சம் மாணவர்களிடம் மனித உரிமைக் கல்வியைக் கொண்டு சேர்த்து வருகின்றார். இந்தப் பணிகளுக்காக, சர்வதேச பொது மன்னிப்பு சபை எனப்படும் அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல், இந்த ஆண்டு சிறந்த மனித உரிமைக் காவலர் என்ற உயர்ந்த விருதினை ஜெர்மனி நாட்டு அதிபரைக் கொண்டு பெர்லின் நகரில் வழங்கியது. இந்த விருதினைப் பெற்ற முதல் இந்தியர் ஹென்றி திபேன் தான்.

மதுரை மாவட்டம் மொட்டமலை பகுதியில் வசிக்கும் அலைகுடி (இந்து குறவர்) சமூகத்தைச் சேர்ந்த கூலி வேலை செய்கின்ற ஆண்களும், பெண்களும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2016 ஏப்ரல் 28 ஆம் தேதியன்று, காவல்துறையினரால் பொய்வழக்குப் போடப்பட்டு மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டனர். ஏழைப்பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளானார்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தந்த தகவலின் பேரில், மக்கள் கண்காணிப்பகத்தின் கள ஆய்வுக் குழு, தக்கலை காவல் நிலையத்திற்குச் சென்று நடந்த செய்திகளை அறிந்து, நீதி கேட்டு அறிக்கைகள் வெளியிட்டது.

இந்தச் சித்திரவதைகளில் ஈடுபட்ட சிறப்புக் காவல்படையின் துணை ஆய்வாளர் விஜயன், தலைமைக் காவலர் மோகன், காவலர் பிரதீப் உள்ளிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, ஜூலை 16 ஆம் தேதி தக்கலையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதே பிரச்சினைக்காக, ஜூலை 25 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஹென்றி திபேன் கலந்து கொண்டு காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டித்துப் பேசியதற்காக அவர் மீது மதுரை மாநகரக் காவல்துறை பல்வேறு பிரிவுகளில் பொய் வழக்கு போட்டுள்ளது. காவல்துறையின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

தமிழக அரசாலும் அனைத்து அமைப்புகளாலும் பாராட்டப்பட வேண்டிய மனித உரிமைகள் காப்பாளர் ஹென்றி திபேன் நீதி கேட்டதற்காகப் பொய்வழக்குப் போட்ட செயல் அரசுக்கும் காவல்துறைக்கும் தீராத களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பொய் வழக்கை, உடனடியாகக் காவல்துறை திரும்பப் பெற வேண்டுமெனத் தமிழக அரசை வலியுறுத்துகின்றேன்.

இந்தக் கோரிக்கையை முன்வைத்து, 2016 செப்டம்பர் 1-ம் தேதி மதுரையில் நடைபெற இருக்கின்ற தொடர் முழக்க அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் புதூர் பூமிநாதன் தலைமையில் கழகத் தோழர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT