தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. மீன்பிரியர்களுக்கு மீன் கிடைக்காது என்ற குறை மட்டும்தான். ஆனால், மீனவர்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சினை. 45 நாட்களை வருமானம் இல்லாமல் சமாளிக்க வேண்டும் என்ற நிலை ஒவ்வொரு தொழில் சமூகத்துக்கு ஏற்பட்டால் அந்த வலியும் வேதனையும் புரியுமோ என்னவோ.
மீன்பிடி தடைக்கால அமலுக்கு வந்துள்ள இன்றைய தினம் மீனவர் மக்கள் முன்னணி தலைவர் ஜே.கோசுமணியை 'தி இந்து' தமிழ் இணையதளத்திடம் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
'எதற்காக இந்த தடைக்காலம்?'
மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துவிட்டது அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? என்ற நமது முதல் கேள்விக்கு எதிர் கேள்வி ஒன்றை முன்வைத்தார் மணி.
"கடந்த 10 ஆண்டுகளாகத்தான் மீன் உள்ளிட்ட கடல் உயிரிகளின் இனவிருத்தியைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு கடல் பகுதியாக ஆண்டுதோறும் 45 நாட்கள் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்து வருகிறது. இங்கு கிழக்கு கடலில் இருக்கும் அதேவகை மீன்கள் அரபிக் கடலிலும் இருக்கின்றன. ஆனால், அரபிக்கடலில் மீன்பிடி தடைக் காலம் வேறு காலகட்டத்தில் அமல்படுத்தப்படுகிறது. மீன்பிடி தடைக்காலத்தை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையிலேயே கொண்டுவந்ததாக அரசு தரப்பு கூறுகிறது. அந்த ஆய்வு முடிவுகளை வெளிப்படையாக எங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்துவிட்டோம். மீன்வளத்துறை அலுவலகத்தில் எழுத்துபூர்வமாக கோரிக்கைகள் வைத்தாகிவிட்டது. ஆனால், இதுவரை எங்களுக்கு விளக்கம் ஏதும் தரவில்லை.
45 நாட்கள் தடைக்காலம் முடிந்து நாங்கள் மீண்டும் கடலுக்குள் செல்லும்போது மீன்பாடு என்னவோ சராசரியாக இருக்கிறதே தவிர மீன்வளத்துறை அதிகாரிகள் சொல்வதுபோல் அமோகமாக இருப்பதில்லை.
எனவே, மீன்பிடி தடைக்காலம் குறித்து எங்களுக்கு ஆதாரபூர்வ விளக்கமளிப்பதுடன் மாறிவரும் பருவ சூழல்களுக்கு ஏற்ப மீன்பிடி தடைக்காலத்தை மறுநிர்ணயம் செய்வது தொடர்பாகவும் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்றார்.
பெரு முதலாளிகளுக்கு தடை கிடையாதா?
45 நாட்கள் மீன் இனவிருத்திக்காக மட்டுமே தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது என்றால், அது அந்நிய நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் உட்பட்டதாக அல்லவா இருக்க வேண்டும். நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தடைக்காலத்தில் சொற்ப நிவாரணத் தொகையோடு தவிக்கும்போது அந்நிய கப்பல் நிறுவனங்களும், பெரு முதலாளிகளின் கப்பல்களும் தொடர்ந்து மீன்பிடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு அரசு கெடுபிடிவிதிக்க வேண்டாமா? எனக் கேட்கிறார் கோசுமணி. அதேபோல், இங்கு மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்போது இலங்கை கடற்படையினர் நமது கடல் எல்லைக்குள் நுழைந்து கடல்வளத்தை கொள்ளையடித்துச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதை கடலோர காவல்படையினரே உறுதி செய்யவேண்டும் என்கிறார்.
மீன்பிடி நிவாரணத் தொகை குறித்து உங்கள் கருத்து?
45 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தில் அரசு மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிவருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ரூ.2500 நிவாரணத் தொகை வழங்கிவரும் நிலையில் இந்த ஆண்டு முதல் ரூ.5000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு வெறும் ரூ.100-தான் கிடைக்கும். இன்றைய விலைவாசி நிலவரத்தின்படி ஒரு மீனவரின் குடும்பம் ரூ.100 வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
சென்னை மீனவர்களுக்கு பாதிப்பு சற்று அதிகம் என்றுதான் கூறவேண்டும். காரணம் வர்தா புயல், எண்ணூர் எண்ணெய்க் கசிவு என ஏற்கெனவே இருபெரும் துயரங்களால் எங்கள் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. இந்நிலையில் மீன்பிடி தடைக்காலமும் வந்துவிட்டது. எனவே, இந்த ஆண்டு மட்டும் சென்னை மீனவர்களுக்கு குறைந்தபட்சமாக தலா ரூ.15,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.
'மீன்வள அமைச்சகம் எப்போது அமைப்பீர்கள் மோடி அவர்களே?'
மீன்பிடி தொழில் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் அந்நியச் செலாவணி கணிசமானது. அத்தகைய தொழில் ஈடுபடும் மீனவர்கள் நலன் காக்க மீன்வள அமைச்சகம் அமைக்கப்படும் என மத்தியில் ஆளும் பாஜக தனது தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டிருந்தது. ஆனால், மத்திய அரசு இதுவரை மவுனம் கலைக்கவில்லை. இத்தருணத்தில், மீன்வள அமைச்சகம் எப்போது அமைப்பீர்கள் என பிரதமர் மோடியைக் கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய அரசுக்கு சில கேள்விகள்..
"ஆழ்கடல் மீன்பிடித்தலை ஊக்குவிப்பதாக மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது. இதற்காக மீனவர்களுக்கு 30 லட்சம் மானியமும் அறிவித்துள்ளது. ஆனால், இந்த மானியத்தை மீனவர்கள் பெறுவதில் இருக்கும் சிக்கலை அரசு உணர்ந்திருக்கிறதா? மீனவர்களுக்கு வங்கிகள் அவ்வளவு எளிதில் கடன் அளித்துவிடுவதில்லை. ஒரு விசைப்படகை தயாரிக்க சராசரியாக ரூ.1 கோடி தேவைப்படுகிறது. அப்படியிருக்க வங்கிக்கடன் உதவி இல்லாமல் விசைப்படகு சாத்தியமாகாது. விசைப்படகு இல்லாவிட்டால் மத்திய அரசு என்னதான் ஊக்குவித்தாலும் ஆழ்கடல் மீன்பிடித்தலும் கடினமே. எனவே, மீனவர்களுக்கு கடன் வழங்குவதற்காகவே பிரத்யேகமாக 'மீனவர் நலன் வங்கி' அமைக்கப்பட வேண்டும்" என்று கோரிக்கையை முன்வைக்கிறார் மணி.
'தாய்க்கப்பல் திட்டம் என்னவானது?'
விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்பவர்கள் 15 முதல் 20 நாட்கள் வரை கடலில் தங்கியிருக்க நேரிடுகிறது. அதுபோன்ற காலங்களில் விசைப்படகுகள் மீன்களை கொண்டு சென்று கரையில் இறக்கிவிட்டு மீண்டும் கடலுக்குத் திரும்பினால் டீசல் செலவு அதிகரிக்கும். தேவையற்ற டீசல் செலவை கட்டுப்படுத்தும் வகையில், ஆழ்கடல் பகுதியிலேயே தாய்க்கப்பல் ஒன்று நிறுத்தப்படும். அந்தக் கப்பலில் மீன் பதப்படுத்தும் வசதி இருக்கும். மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களை அதில் சேமித்துவைத்துவிட்டு பின்னர் அதை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான நிதி ஒதுக்கீடு எல்லாம் செய்யப்பட்டுவிட்டதாகக் கூட தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை 'தாய்க்கப்பல்' திட்டம் அமலுக்கு வரவில்லை என்பதே உண்மை. இத்திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.
'கடலை கொள்ளையடிக்காதீர்'
"நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழிற்சாலைகள் அவசியம் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், கடற்கரைகளில் பெரும் தொழிற்சாலைகளை அமைப்பது கடல் வளத்தை கொள்ளையடிக்கும் செயல். கடலில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் கடல் வளம் அழியும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தால் நன்மை இருக்கிறது என்றாலும் நெம்மேலியில் ஒரு மீனவ கிராமமே அழிந்துவிட்டது என்ற உண்மை நிலை எத்தனை பேருக்குத் தெரியும். தொழில்வளத்தை பெருக்கும் நோக்கில் மீனவர்கள் தொழிலை வாழ்வாதாரத்தை முடக்க வேண்டாம். கூடங்குளம் அணுஉலையைக்கூட எங்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும் திட்டமாகவே நாங்கள் பார்க்கிறோம். புகுசஷிமா போன்று ஒரு நிகழ்வு ஏற்பட்டால் கூடங்குளம் கடல் பகுதி என்னவாகும்? கடல் வளத்தை அழித்து தொழில் வளத்தை பெருக்க வேண்டாம் என்பதே மத்திய மாநில அரசுகளுக்கு நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை" எனக் கூறும் மீனவ சங்கத் தலைவர் மணி மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் நிவாரணத் தொகையை மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருக்காமல் வருமானம் பெறும் வகையில் மாற்றுத் தொழிலை அரசாங்கமே யோசித்து பரிந்துரைக்க வேண்டும். அது மீன்பிடித் தொழிலுக்கு தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கிறார்.
மீன்பிடித் தடைக்காலத்துக்கான விளக்கம், மீனவர் நிவாரணத் தொகை அதிகரிப்பு, மத்தியில் மீன்வள அமைச்சகம், மீனவர்களுக்கு தனி வங்கி என பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்த மணி ஒவ்வோர் ஆண்டும் மீன்பிடி தடைக்காலத்தில் தங்கள் குடும்பத்தலைவிகளின் சிறுசேமிப்பு குடும்பத்தை நடத்த பெரிதும் உதவியாக இருக்கிறது. கடல் அன்னை மட்டுமல்ல எம்குல பெண்களும் எங்களை வாழவைக்கிறார்கள் என்று நன்றி நவிலலுடன் பேட்டியை முடித்துக் கொண்டார்.