தமிழகம்

வலசைப் பாதையில் ஒரு வழிகாட்டி: குரங்கு அருவி அருகே ஓர் அற்புதக் காட்சி

கா.சு.வேலாயுதன்

பொள்ளாச்சி ஆழியாறு குரங்கு அருவி அருகே உள்ள யானைகள் வழித்தடம் தினசரி வழிப்போக்கர் களுக்கு அற்புதக் காட்சியாக அமைந்துகொண்டிருக்கிறது.

ஆழியாறிலிருந்து வால்பாறை செல்லும் சாலையில் சுமார் 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது, ‘மங்கி ஃபால்ஸ்’ எனப்படும் குரங்கு அருவி. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு சீஸன் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் வந்து செல்கின்றனர். இந்த அருவி, பிரதான சாலையிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் வனத்துக்குள் அமைந்துள்ளது. இந்த அருவிக்குச் செல்லும் சாலைக்கு அப்பால் கிழக்கு நோக்கி ஒரு சாலை திரும்புகிறது. அதன் எதிரே உள்ள மலைக்குன்றுகளின் மீது யானைகள் செல்லும் வழித்தடம் அமைந்துள்ளது. தினசரி இந்த பாதையில் காலை, மாலையில் யானைகள் கூட்டம் கடந்து செல்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது. காலை 10 மணிக்கும், மாலை சுமார் 3 மணிக்கும் 2 குழுக்களை கொண்ட யானைகள் கூட்டம் இந்த சாலையை கடந்து இவ்வழியே செல்பவர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது.

சாலையை கடக்கும் முன்பு இந்த யானைக் கூட்டம் கீழே அடர்ந்த வனப் பகுதியிலேயே நின்று கொள்கிறது. ஆண் யானை ஒன்று முதலில் வெளியே வந்து சாலையின் ஓரமாய் நின்று கொண்டு ஒரு பிளிறல் எழுப்புகிறது. அதைத் தொடர்ந்து பின்தங்கியுள்ள யானைக் கூட்டம் சாலையை கடக்கிறது. இந்த யானைக் கூட்டம் ஒரு பாதுகாப்பான இடத்துக்குச் சென்ற பிறகு, கூட்டத்தில் உள்ள யானை ஒன்று சிறிய அளவில் பிளிறல் எழுப்புகிறது. அதையடுத்து சாலையில் நிற்கும் ஆண் யானை, யானைக்கூட்டம் சென்ற பாதை நோக்கிச் செல்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, மாலை 3 மணியளவில் 5 யானைகள் கொண்ட கூட்டம் இப்படி சாலையை கடந்தபோது முதலில் அதில் உள்ள ஆண் யானை சாலையின் ஓரம் வந்து நின்று கொண்டது. இதனால், வாகன ஓட்டிகளை வனத்துறையினர் இருபுறமும் நிறுத்தி எச்சரித்தனர்.

சாலையின் ஓரமாக நின்ற யானை சிறிய அளவில் பிளிறியதும், உடனே ஒரு குட்டியுடன் கூடிய 4 யானைகள் சாலையை சாவகாசமாக கடந்து காட்டுக்குள் நுழைந்தன. அங்கேயே நின்ற ஆண் யானை, காட்டுக்குள் சென்ற யானையின் பிளிறல் கேட்டவுடன் அப்படியே மெல்ல அவை சென்ற பாதையிலேயே சென்று மறைந்தது.

இப்படி முதல் யானை வந்து, கூட்டத்து யானைகளும் வந்து சாலையை கடந்த பிறகு ஆண் யானையும் காட்டுக்குள் உட்புகுந்து மறைய சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் ஆனது. இந்த காட்சி, அந்த வழியே சென்றவர்களுக்கு அற்புத விருந்தாக அமைந்தது.

SCROLL FOR NEXT