ஜல்லிக்கட்டு விவகாரத்தை அரசியல் விளையாட்டாக்க வேண்டாம் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க நேற்று அரியலூர் வந்த பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குளச்சல் துறைமுகம் ரூ.25 ஆயிரம் கோடியில் மேம்படுத்தப் பட்டு வருகிறது. இந்தப் பணிகள் நிறைவடையும்போது, இத்துறைமுகம் இந்தியாவின் நுழைவுவாயிலாக பிரபலமாகும். ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டம் தொடங்குவதற்காக சம்பந்தப்பட்ட துறையிடம் கருத்துரு கேட்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்து வருவது எனது சிரமத்தை குறைப்பதாக உள்ளது. எனினும், ஜல்லிக்கட்டு விவகாரத்தை வெறும் அரசியல் விளையாட்டாக்க வேண்டாம் என்றார்.
திருமழபாடி அருகே செம் பியக்குடியில் ஜல்லிக்கட்டு காளை களை வளர்ப்போரை சந்தித்து அவர்களது கோரிக்கை மனுவை பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டு காளை கட்டப்பட்டிருந்த கயிற்றை பிடிக்க முயன்றார். அப்போது, மாட்டின் கொம்பு கீறியதில் அமைச்சரின் வலது கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அரியலூரில் சிகிச்சையளிக் கப்பட்டு, அவரது கையில் கட்டு போடப்பட்டது.