தமிழகம்

சென்னையில் ஆட்டோக்களுக்கு தீ வைக்கும் மர்ம கும்பல்: ஒரே நாளில் அடுத்தடுத்த தீ விபத்து

செய்திப்பிரிவு

சென்னை சூளைமேடு, கோடம்பாக்கத்தில் 5 ஆட்டோக்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். மயிலாப்பூரில் ஒரு குடிசை வீடும், அசோக்நகரில் ஒரு காரும் தீயில் சேதமாகின.

இச்சம்பவங்கள் குறித்து மாநகர போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சூளைமேடு காமராஜர் நகர் 3-வது தெருவில் உள்ள அண்ணா ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் பெயர் பலகையும், அருகே நிறுத்தப்பட்டிருந்த கவிதா என்பருக்கு சொந்தமான ஆட்டோவும் ஞாயிற்றுக்கிழமை இரவில் திடீரென தீப்பிடித்து எரிந்தன. அருகே இருந்த பொதுமக்களின் உதவியுடன் ஆட்டோ டிரைவர்கள் தீயை அணைத்தனர்.

அடுத்த அரை மணி நேரத்தில் என்.ஜி.ஓ.காலனி 2-வது பிரதான சாலையில் முனீருல்லா என்பவருக்கு சொந்தமான ஆட்டோவின் சீட்டில் தீப்பிடித்து எரிந்தது. முனீருல்லா உடனே தீயை அணைத்ததால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.என்.கே.காலனி 4-வது தெருவில் மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோவும் தீப்பிடித்து எரிந்தது. இதன் உரிமையாளர் யார் என்பது தெரியவில்லை. காலி மைதானமாக இருந்ததால் பொதுமக்கள் யாரும் தீயை அணைக்க வரவில்லை. இதனால் ஆட்டோ முற்றிலும் எரிந்து சேதமானது.

சூளைமேட்டில் அறிஞர் அண்ணா சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான ஆட்டோவும் தீப்பிடித்து எரிந்தது.

இந்த நான்கு தீ வைப்பு சம்பவங்களும் இரவு 11.30 மணி முதல் 1.30 மணிக்குள் நடந்து முடிந்துவிட்டன. இது குறித்து சூளைமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்ம கும்பல் திட்டமிட்டு அனைத்து ஆட்டோக்களுக்கும் தீ வைத்திருப்பதாக காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆட்டோக்களை குறிவைத்து தீ வைப்பதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் அருகே நந்தவனம் குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கோபி என்பவருக்கு சொந்தமான ஆட்டோ திங்கள்கிழமை காலை 4.30 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதை யாரும் கவனிக்காததால் ஆட்டோ முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து கோடம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அசோக்நகர் 3-வது பிரதான சாலையில் வினோத் என்பவர் தனது காரை வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்தார். இந்த காருக்கும் ஞாயிற்றுக்கிழமை இரவில் யாரோ தீ வைத்து விட்டனர்.

மயிலாப்பூர் சாய்பாபா கோயில் அருகே 30-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை இரவில் ஆறுமுகம், வெங்கடேஷ் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. பொதுமக்களே தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

SCROLL FOR NEXT