தமிழகம்

2 ஆண்டுகளில் முதலீடு 50 சதவீதம் அதிகரிப்பு: தங்கம் விலை மேலும் உயரும் அபாயம்

கி.ஜெயப்பிரகாஷ்

விலையை கட்டுப்படுத்த முதலீடு திட்டத்தில் மாற்றம் அவசியம்

கடந்த 2 ஆண்டுகளில் தங்கத்தில் முதலீடு செய்வது 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்க டாலருக்கு அடுத்த படியாக, பொது சர்வதேச மாற்று நாணயமாக தங்கம் கருதப்படுகி றது. எனவே, உலக நாடுகள் தங்கள் கஜானா கையிருப்பில் குறிப்பிட்ட ஒரு பகுதியை தங்கமாக வைத்திருப்பதை பொருளாதாரக் கொள்கைகளில் ஒன்றாக கடைபிடித்து வருகின்றன.

இந்தியாவை பொறுத்தவரை, தங்க உற்பத்தி படிப்படியாக குறைந்து வருகிறது. 1942-ம் ஆண்டில், 81 டன் அளவில் இருந்த உற்பத்தி, தற்போது வெறும் ஒரு டன்னுக்கும் குறைவான அளவுக்கு தேய்ந்திருக்கிறது. தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே உள்ள பெருத்த இடைவெளி, வெளிநாடுகளில் இருந்து இறக்கு மதி செய்யப்படுவதன் மூலம் நிரப்பப்படுகிறது.

தங்கம் இறக்குமதி அளவு 2013-ல் 960 டன், 2014-ல் 850 டன், 2015-ல் 750 டன், 2016-ல் 800 டன் ஆக இருக்கிறது. அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு புதிய வரியை விதித்து வருகிறது. இதனால், வெளிநாடுகளில் இருந்து மறைமுகமாக தங்கம் கொண்டு வருவது அதிகரித்துள்ளது.

உலக நாடுகளின் ஒட்டுமொத்த தங்க வர்த்தகத்தில் 40 சதவீதம், ஆசிய நாடுகளில் மட்டுமே நடக்கிறது. இதில் சீனா, இந்தியா வில்தான் தங்கம் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது. சமீபகாலமாக தங்கத்தில் முதலீடு செய்வது லாபமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

இதன் அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தங்கத்தில் முதலீடு செய்வது 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த 6 நாட்களில் பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.22,728-க்கு விற்கப்படுகிறது. இது மேலும் அதிகரித்து, இந்த ஆண்டின் இறுதியில் ரூ.23 ஆயிரத்தை தாண்டும் என நகைக் கடை உரிமையாளர்கள் தெரிவிக் கின்றனர்.

இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுசெயலாளர் எஸ்.சாந்த குமார், ‘தி இந்து’விடம் கூறிய தாவது:

மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த தங்க முதலீடு திட்டம், பொதுமக்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. தங்கம் பாதுகாப்பாக இருக்கவும், அதன்மூலம் வருவாய் பெறவும் இத்திட்டத்தில் வழி இருந்ததால் மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத் தியது. ஆனால், தற்போது மத்திய அரசின் தங்க முதலீடு திட்டத்தில் நடப்பது வேறாக இருக்கிறது.

இத்திட்டத்தில், ஒருவர் 500 கிராம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும். தங்க முதலீடுக்கு வரியும் விதிக்கப்படுகிறது. இதனால், இத்திட்டத்தில் முதலீடு செய்ய மக்கள் தயங்குகின்றனர். எனவே, தங்கம் முதலீட்டுக்கான வரியை நீக்க வேண்டும். வரை யறையும் இருக்கக் கூடாது.

இதுபோன்ற மாற்றங்களை கொண்டுவந்தால், இறக்குமதி தேவை கணிசமாக குறையும். உள்ளூர் தேவைக்கு நம் நாட்டின் தங்கத்தை பயன்படுத்துவதால், சர்வதேச அளவில் விலை உயர்ந் தாலும், இங்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இவ்வாறு சாந்தகுமார் கூறினார்.

‘தங்கமயில்’ நகைக்கடை துணை நிர்வாக இயக்குநர் பி.ரமேஷ் கூறும்போது, ‘‘உலக நாடுகளில் ஏற்படும் பொருளாதார பாதிப்பு, அரசியல் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் தங்கம் விலையில் ஏற்றத் தாழ்வு காணப்படும். நம் நாட்டில் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தங்கம் முதலீடு திட்டத்தை மத்திய அரசு எளிமைப்படுத்த வேண்டும். தற்போதுள்ள நிலையில் ஒருவர் முதலீடு செய்ய விரும்பினால் அதற்கு ஒரு மாதம் வரை ஆகிவிடுகிறது. இந்த நிலை மாற வேண்டும். மேலும், இறக்குமதி வரியை கணிசமாக குறைத்தாலே உள்ளூரில் தங்கம் விலை குறையும்’’ என்றார்.

SCROLL FOR NEXT