தேர்தல் முடிந்த பின்னரும் வெள்ள நிவாரண நிதி கிடைக்கவில்லை. அம்மா அழைப்பு மையத்தில் புகார் அளித்தும் பயனில்லை என வடசென்னை பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த வடகிழக்கு பருவமழை காலத்தில், நவம்பர் இறுதி, டிசம்பர் முதல் வாரத்தில் தொடர் கனமழை பெய்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
இந்த மாவட்டங்கள் தவிர, கடலூர், தூத்துக்குடி மாவட்டங் களும் பாதிக்கப்பட்டதால், தமிழக அரசு சார்பில் வெள்ள நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
இதில் வெள்ளத்தால் குடிசை களை இழந்த குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் என நிவாரணத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
வெளி மாவட்ட அலுவலர்களைக் கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் கணக்கெடுக்கப்பட்டு 30.5 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரு பிரிவாக வெள்ள நிவாரணம் படிப்படியாக வழங்கப்பட்டு வந்தது. இதில் பல இடங்களில் வெள்ள நிவாரணம் கிடைக்கவில்லை. இதற்கிடையில் தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்ததால், வெள்ள நிவாரணம் வழங்கும் பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் வடசென்னையில் மழையால் பாதிக்கப்பட்டு, கணக்கெடுப்பில் விவரங்கள் அளித்தவர்களுக்கு நிவாரணத் தொகை வரவில்லை. அதிகாரிகளும் சரியான பதில் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக, ‘தி இந்து’வின் உங்கள் குரலில், பெரம்பூரைச் சேர்ந்த ரமேஷ் கூறியதாவது:
எங்கள் பகுதியில் 4 நாட்களுக்கும் மேலாக மழைநீர் தேங்கியிருந்தது. கணக்கெடுப்பில் விவரங்கள் அளித்திருந்தோம். ஆனால் எங்களுக்கு இதுவரை நிவாரணத் தொகை கிடைக்கவில்லை. நாங்கள் அம்மா அழைப்பு மையத்துக்கு இது தொடர்பாக 60 முறைக்கும் மேல் புகார் அளித்துவிட்டோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இங்குள்ள வட்டாட்சியரிடம் கேட்டால், கேட்கும் போதெல்லாம் மனு எழுதித் தரும்படி கேட்பார். அப்படியும் பலமுறை மனு எழுதி கொடுத்துள்ளோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. பிப்ரவரி மாதத்தில் கேட்டபோது, தேர்தல் வந்ததால் விதிப்படி அளிக்க முடியாது என கூறிவிட்டனர். இதுபோல், சென்னையின் இதர பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூரில் லட்சக்கணக்கானவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இது தொடர்பான உண்மை நிலையை முதல்வர் அறிந்து, எங்களுக்கு வெள்ள நிவாரணம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.