தமிழகம்

சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணிப்பு- மு.க.ஸ்டாலின் பேட்டி

செய்திப்பிரிவு

கருணாநிதி பற்றி அதிமுக உறுப்பினர் இழிவாக பேசியதையும் எம்.எல்.ஏ. சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதையும் கண்டித்து, பேரவை கூட்டத் தொடரை திமுக புறக்கணிக்கிறது என மு.க.ஸ்டாலின் கூறினார்.

திமுக எம்.எல்.ஏ.க்கள், சட்ட மன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை காலை கோட்டைக்கு வந்தனர். ஆனால், அவர்கள் யாரும் சட்டசபைக்குள் செல்லவில்லை. இதுகுறித்து நிரு

பர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறிய தாவது:

சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் மார்க்

கண்டேயன், ஆளுநர் உரை மீது பேசாமல் திட்டமிட்டு திமுக தலைவர் கருணாநிதி பற்றியும், திமுக பற்றியும் இழிவாகவும் கொச்சைப் படுத்தியும் பேசியுள்ளார்.

இதற்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக உறுப்பினரின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என துரைமுருகன் வலியுறுத்தினார். ஆனால் அதை நீக்கவில்லை.

அமைச்சர் கே.பி.முனுசாமி, அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அதிமுக உறுப்பினர் பேசியதை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் இந்தப் பேச்சு சட்டமன்ற மரபுக்கு உகந்ததுதான் என்றும் கூறியுள்ளனர்.

அவர்கள் கூற்றுப்படி சபையில் நாங்களும் இதேபோல் பேசலாமா? அதற்கு அனுமதிப்பார்களா? முதல்வர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை பலமுறை கட்சியை விட்டு நீக்கி, பிறகு அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறவில்லையா? மீண்டும் அவர்களை சேர்த்துக் கொள்ளவில்லையா? இதுபற்றி பேரவையில் பேச எங்களை அனுமதிப்பார்களா?

அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். செயல்பட முடியாதவராக உள்ளார் என்று அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தது ஆதாரப்பூர்வமாக மக்கள் குரல் பத்திரிகையில் வந்ததே, இதுகுறித்து பேச அனுமதிப்பார்களா? எம்.ஜி.ஆர். மறைந்த நேரத்தில் ஜானகி அம்மாள், மோரில் விஷம் கலந்து கொடுத்தார் என தி.நகரில் நடந்த கூட்டத்தில் இப்போதைய முதல்வர் பேசியுள்ளார். இதுகுறித்து பேச அனுமதிப்பார்களா?

இதுபற்றியெல்லாம் பேச முயன்ற திமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற செய்தது மட்டுமின்றி, எம்.எல்.ஏ. சிவசங்கரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

எனவே, இதைக் கண்டித்து இந்தக் கூட்ட தொடர் முழுவதிலும் பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

SCROLL FOR NEXT