குடியரசு தினத்தன்று மெரினா காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே கொடியேற்றப்படும். இதை முன்னிட்டு ஆயுதப்படை பிரிவு போலீஸார் ஒத்திகையில் ஈடுபடுவார்கள். இந்த ஆண்டும் ஜனவரி 19, 21, 24 ஆகிய தினங் களில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும் என சென்னை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் அறிவித்திருந்தார்.
இந்த தினங்களிலும் குடியரசு தினத்தன்றும் காமராஜர் சாலையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் இளைஞர் கள், மாணவர்கள், பொதுமக்கள் திரண்டு போராடி வருவதால் நேற்று நடக்கவிருந்த குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. அடுத்ததாக 21-ம் தேதி நடைபெற வேண்டிய ஒத்திகை நிகழ்ச்சியை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை ஆயுதப் படை பிரிவு போலீஸார் செய்து வருகின்றனர்.