பணப் பட்டுவாடா புகாரில் சிக்கும் வேட்பாளர்களை 5 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்ய தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2016 மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து இரு தொகுதிகளின் வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டது. பின்னர் நவம்பர் 19-ம் தேதி அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவின் மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 12-ம் தேதி இடைத்தேர்தல் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந் தது. ஆனால் அந்தத் தொகுதியில் அளவுக்கு அதிகமாக பணப் பட்டுவாடா செய்யப்பட்டிருப்பது வருமான வரித்துறை விசாரணை யில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
இதைத்தொடர்ந்து பணப் பட்டுவாடா புகாரில் சிக்கும் வேட்பாளர்களை 5 ஆண்டு களுக்கு தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக ஆணைய வட்டாரங் கள் கூறியதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்காளர் களுக்கு பெருமளவில் பணம் வழங்கப்பட்டது. பணம், பரிசுப் பொருட்கள், செல்போன் ரீசார்ஜ், நாளிதழ் சந்தா, பால் கூப்பன், வங்கிக் கணக்கில் பணம் உட்பட பல்வேறு நூதன வழிகளில் வாக்காளர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது.
தேர்தலில் பணப் பலத்தை தடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. முதல்கட்டமாக பணப் பட்டுவாடா புகாரில் சிக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். அதன்படி வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய புகாரின்பேரில் நீதிமன்ற குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படும் வேட்பாளர்களை 5 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் வழங்க வகை செய்யும் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சகத்திடம் விரைவில் பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஓட்டுக்கு வாக்காளர்கள் பணம் வாங்கினால் அவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி ஏற்கெனவே எச்சரித்திருப்பது நினைவுகூரத்தக்கது.