தமிழகம்

51 மீனவர்களையும், 114 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை: மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்

செய்திப்பிரிவு

இலங்கை அரசு கைப்பற்றியுள்ள தமிழக மீனவர்களின் படகுகள், மீன்பிடி உபகரணங்களை விரைவில் பழுதுநீக்கி மீனவர்களிடம் ஒப்படைக்கவும், இலங்கை சிறையில் வாடும் 51 மீனவர்கள், அவர்களது 114 படகுகளை விடுவிக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

''தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் நாட்டுடமையாக்கப்படும் என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரா பேசியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதே கருத்தை இலங்கை வடக்கு மாகாண மீன்வளத் துறை அமைச்சர் பாலசுப்பிரமணியம் தினேஷ்வரனும் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு விடுவிப்பதில் தாமதம் செய்வதால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமும், அவர்களது குடும்பமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கள் கவனத்துக்கு பலமுறை கொண்டு வந்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, தமிழக மீனவர்களின் 114 மீன்பிடி படகுகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன என்றும் அவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசினை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பலதடவை வலியுறுத்தினார் என்பதை தாங்கள் அறிவீர்கள். கடந்த 31-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற இருநாட்டு மீன்வளத் துறை கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்திலும் இப்பிரச்சினையை தமிழக அரசு எழுப்பியது.

கடந்த 2014-ம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 80 படகுகள், 2015-ம் ஆண்டுதான் விடுவிக்கப்பட்டன. கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும்போதே இரண்டு படகுகள் கடலில் மூழ்கின. அதுதவிர, இந்த 80 படகுகளில் 16 படகுகள் பழுதுநீக்க முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன. 31 படகுகளுக்கு பெரிய சேதங்களும், 33 படகுகளுக்கு சிறிய அளவிலான சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இது, தமிழக மீனவர்களுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இப்படகுகளை பழுதுநீக்கி தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பலதடவை வலியுறுத்தினார்.

இந்தச் சூழ்நிலையில், தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகுகள் அனைத்தையும் நாட்டுடமையாக்கப் போவதாக இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரா, இலங்கை வடக்கு மாகாண மீன்வளத் துறை அமைச்சர் பாலசுப்பிரமணியம் தினேஷ்வரன் ஆகியோர் பேசியிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் அமைதியின்மையையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செய்திகள் வெளிவருவது இது முதல்முறையல்ல.

இதற்கு முன்பு, இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை வடக்கு மாகாண இலங்கை மீனவர்களுக்கு கொடுப்பதற்கும், பயனில்லாமல் இருக்கும் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை ஏலம் விடுவதற்கும் அனுமதிக்கும்படி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை இலங்கை அரசு அணுகியுள்ளது என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரா தெரிவித்ததாக இலங்கையில் உள்ள சில ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதுபோன்ற துரதிருஷ்டவசமான, ஆத்திரமூட்டும் அறிவிப்புகள் தமிழக மீனவர்களின் பாரம்பரிய பாக்.நீரிணைப் பகுதியில் அவர்களை மீன்பிடிக்கவிடாமல் மறைமுகமாக மிரட்டும் நடவடிக்கையாகும். இது, மிக முக்கியமான தமிழக மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு தூதரக ரீதியில் மேற்கொள்ளும் முயற்சியை இலங்கை அரசு கேலி செய்வது போல அமைந்துள்ளது. இதற்கு இந்திய அரசு தனது கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

1974-ம் ஆண்டு இந்தியா - இலங்கை அரசுகள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ள தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை விரைவில் பழுதுநீக்கி மீனவர்களிடம் ஒப்படைக்கவும், இலங்கை சிறையில் வாடும் 51 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடி விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கடிதத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT