நீட் தேர்வு முடிவுகள் இணையதளத் தில் நேற்று வெளியிடப்பட்டன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கு நாடு முழுவதும் 6.11 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். பஞ்சாப் மாணவர் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்தார்.
நாடு முழுவதும் 470 அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65,170 எம்பிபிஎஸ் இடங்களும் 308 அரசு, தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 25,730 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. இந்த மருத் துவப் படிப்புகளுக்கு 2017-18ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) நாடு முழுவதும் கடந்த மாதம் 7-ம் தேதி நடந்தது. இந்த தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தியது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 நகரங்களில் 80-க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடந்தது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அசாம், பெங்காலி ஆகிய 10 மொழிகளில் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
4,97,043 மாணவர்கள், 6,41,839 மாணவிகள், 8 திருநங்கைகள் என மொத்தம் 11,38,890 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 10,90,085 பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் விண்ணப்பித்திருந்த 88,478 மாணவ, மாணவிகளில் 95 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.
நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங் கியல் பாடங்களில் தலா 45 கேள்வி கள் கேட்கப்பட்டன. ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகின் றன. தாவரவியல், விலங்கியல் பாட கேள்விகள் எளிதாகவும் இயற் பியல், வேதியியல் பாட கேள்வி கள் கடினமாகவும் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். பிளஸ் 2 பாடங்களைவிட பிளஸ் 1 பாடங்களில் இருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
தேர்வு முடிவுகள் வெளியீடு
நீட் தேர்வு முடிவுகளை ஜூன் 8-ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டிருந்தது. இதற்கிடையே, மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. சமீபத்தில் இந்தத் தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம், ஜூன் 26-ம் தேதிக்குள் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவிட்டது.
அதன்படி, நேற்று காலை 10.15 மணி அளவில் நீட் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டது. www.cbseneet.nic.in, www.cbse.nic.in, www.cbseresults.nic.in ஆகிய இணைய தளங்களில் முடிவுகள் வெளி யிட்டப்பட்டுள்ளன. இதில் 2,66,221 மாணவர்கள், 3,45,313 மாணவிகள், 5 திருநங்கைகள் என மொத்தம் 6,11,539 பேர் (56.1 சதவீதம்) எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் நவ்தீப் சிங் 697 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். 2, 3-ம் இடத்தை மத்தியப்பிரதேச மாணவர்களும், 4-வது இடத்தை கர்நாடக மாநில மாணவரும் பிடித்துள்ளார். தரவரிசைப் பட்டியலில் முதல் 25 இடங்களில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த யாரும் இதில் இடம் பெறவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு பேர் தகுதி பெற்றுள்ளனர் என்ற விவரங்களை சிபிஎஸ்சி வெளி யிடவில்லை.
கட்-ஆப் மதிப்பெண்கள்
பொதுப் பிரிவில் 5,43,473 பேர் 697 முதல் 131 மதிப்பெண்கள் வரையும் ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவில் 47,382 பேர் 130 முதல் 107 மதிப்பெண்கள் வரையும் பெற்றுள்ளனர்.
பொதுப் பிரிவு மாற்றுத் திறனாளிகள் 6,018 பேர் 130 முதல் 118 மதிப்பெண்கள் வரையும் ஓபிசி, எஸ்சி, எஸ்டி மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 267 பேர் 130 முதல் 107 மதிப்பெண்கள் வரையும் பெற்றுள்ளனர்.