முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக என்ற பேரியக்கம், தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு பல்வேறு வழிகளில் உழைத்த இயக்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த இயக்கத்தின் தற்போதைய நிலையை குறித்து எனது வருத்தத்தை தெரிவித்து இருந்தேன். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் உண்மையாக, தமிழரின் நலனுக்காக உழைத்த ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார் என்பதை அறிந்து வேதனைக்குள்ளானேன்.
அவருடைய விசுவாசத்தையும், உழைப்பையும் நேரில் பார்த்த அனுபவத்தினாலும், அவர் திறமையில் உள்ள நம்பிக்கையினாலும், எங்கள் இயக்க சகோதரர்களின் விருப்பத்துக்கும் வேண்டுகோளுக்கும் மதிப்பளித்து ஓ.பன்னீர்செல்வத்தின் முயற்சி அனைத்தும் வெற்றிபெற வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு ஆர்.சரத்குமார் தெரிவித்துள்ளார்.